ரூ. 50,000 கோடி வேலைவாய்ப்புத் திட்டம்.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!

0 4200

ஊரடங்கால் சொந்த ஊருக்கு திரும்பிய புலம் பெயர் தொழிலாளர்கள் பலன் பெறும் வகையில் நாட்டின் 6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வேலைவாய்ப்பு திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.

ஏழைகள் நலனுக்கான வேலைவாய்ப்புத் திட்டம் எனப்படும், கரீப் கல்யாண் ரோஜ்கார் அபியான் திட்டத்தைக் காணொலியில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். பீகாரின் ககாரியா மாவட்டத்தில் தெலிகார் என்னும் ஊரில் முதன்முறையாகத் தொடங்கப்பட்டுள்ளது. அங்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்திய ராணுவத்தில் பீகார் வீரர்களின் வீரதீரச் செயல்களைப் பாராட்டினார். புலம்பெயர் தொழிலாளர்கள் வேறு மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்ல விரும்பவில்லை என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில், 116 மாவட்டங்களில், மொத்தம் 125 நாட்களுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்கும், ஊர்ப்புற மக்கள், வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தை மத்திய அரசு தீட்டியுள்ளது.

ஊர்ப்புறத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி, வேலைவாய்ப்பு வழங்கும் இந்தத் திட்டத்தில் கண்ணாடி இழை வடம் பதித்தல், ரயில்வே பணி, துப்புரவுக்கான வேலைகள், பண்ணைக் குட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட 25 வகையான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, சுரங்கம், குடிநீர் வழங்கல், சுற்றுச்சூழல், ரயில்வே, தொலைத்தொடர்பு, வேளாண்மை உள்ளிட்ட 12 துறைகள் ஒருங்கிணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments