ஒற்றை சோர்ஸால் 70 பேருக்குப் பரவிய கொரோனா... உயிர் பயத்தில் தவிக்கும் ஊரடங்கை மதிக்காத ஆந்திர கிராம மக்கள்!

0 5512

ரடங்கு உத்தரவை மதிக்காமல் சமூக இடைவெளியைக் காற்றில் பறக்கவிட்டுப் பிறந்த நாள் விழா,   நிச்சயதார்த்தம், திருமணம் என்று அடுத்தடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர கிராம மக்கள்  இப்போது கொரோனாவிடம் சிக்கி அல்லாடி வருகின்றனர்.

ஆந்திரப் பிரதேச மாநிலம்  கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 'கொல்லாலா மாமிடாடா' என்ற  கிராமம் உள்ளது. காக்கிநாடாவிலிருந்து 24 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் இந்தக் கிராமத்தில்  சுமார் 19,000 பேர் வசிக்கிறார்கள். கொரோனா நோய்த் தொற்று பரவக்கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை இந்த கிராமத்தினர் சற்றும் சட்டை செய்யவில்லை. இதனால் கொரோனா இந்த கிராமத்தை தற்போது, ஆட்டுவித்து வருகிறது. image

ஜூன் 18 - ம் தேதி வரை கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 500 கொரோனா நோயாளிகள் இருந்தார்கள்.  இவர்களில் 208 பேர் கொல்லாலா மாமிடாடா கிராமத்துடன் நேரடியாகத்  தொடர்புடையவர்கள். இந்தக் கிராமத்தில் மட்டும் 118 பேர் இதுவரை நோய் தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார். அதில்,  30 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருவர் பலியாகியிருக்கின்றனர். தற்போது கடுமையான ஊரடங்குக்கு இந்தக் கிராமம் உட்படுத்தப்பட்டிருக்கிறது. கடினமான ஊரடங்கு காரணமாக இந்தக் கிராமத்தில் தற்போது மயான அமைதி நிலவுகிறது.  சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. நூறு மீட்டருக்கு ஒரு போலீஸ் என கிராமமே தீவிர கண்காணிப்பில் உள்ளது.


கொரோனா தன் கோரப்பிடியை இந்தக் கிராமத்தில் இறுக்கிய பிறகு ஞானம் பெற்றிருக்கும் கிராம வாசிகள், " இப்போது வீட்டுக்குள்ளேயே பயந்து போய் முடங்கிக் கிடக்கிறோம். அத்தியாவசியத் தேவைகளுக்குக் கூட வெளியே வருவதில்லை" என்கிறார்கள்.மே மாத மத்தியில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில்  சுமார் 60 கோரோனோ நோயாளிகளே பதிவாகியிருந்தார்கள். ஆனால், கொல்லாலா மாமிடாடா கிராமம் ஹாட்ஸ்பாட்டாக மாறிய பிறகு நோயாளிகள் எண்ணிக்கை 500 -ஐ தாண்டிவிட்டது- image

கொல்லாலா மாமிடாடா கிராமத்தில், 55 வயதுடைய கௌடா சத்யநாராயணா குடும்பத்துடன் வசித்துவந்தார். இவர் போட்டோகிராபர். கிராமத்தில்  உள்ள கணேஷ் டீக்கடையில் சத்யநாராயணாக தன்  நண்பர்களுடன் டீ அருந்துவது வழக்கம்.  மே 12 - ம் தேதி சத்யா நாராயணாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 20 - ம் தேதி அவரது உடல்நிலை கவலைக்கிடமாக, காக்கிநாடா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார். அவருக்கு கோரோனோ நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கார் ஓட்டுநருக்கு நோய்த் தொற்று பரவியது. மேலும், சத்ய நாராயணனின் இரண்டு உறவினர்கள், அதைத் தொடர்ந்து அவரின் மனைவி, கல்லூரி படிக்கும்  மகன் ஆகியோருக்கும் நோய்த் தொற்று அடுத்தடுத்து பரவியது. அதன் பிறகு கணேஷ் டீ கடைக்குப் பால் வழங்கியவருக்கும் தொற்று  உறுதி செய்யப்பட்டது. கடந்த  மே மாதத்தில் இந்த கிராமத்தில் நடந்த பிறந்த நாள் விழா, பக்கத்து கிராமத்தில் நிச்சயதார்த்த விழாவுக்கும் குடும்பத்துடன் சத்யநாராயணா சென்று வந்திருக்கிறார். இத்துடன் இல்லாமல் இந்தக் கிராமத்தில் நடந்த திருமண விழா ஒன்றிலும் போட்டோ பிடிக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளார். விழிப்புணர்வு இல்லாமல் சென்ற இடம் எங்கும் கொரோனா நோய்த் தொற்று இவரால் பரவியிருக்கிறது. 
image

சத்யா  நாராயணா போட்டோ பிடித்த திருமண விழாவில் கலந்துகொண்டவர்கள், சத்யா நாராயணா இறப்புக்கு துக்கம் விசாரிக்க வந்தவர்களுக்கும்  நோய்த் தொற்று பரவியிருக்கிறது. கணேஷ் டீ கடையில் சத்ய நாராயணாவுடன் நேரடித் தொடர்பில் இருந்த ஏழு பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்திருக்கிறது. இவர்களிடமிருந்து மேலும் 15 பேருக்குத் தொற்று பரவியிருக்கிறது. சத்யநாராயணனிடமிருந்து மட்டும் சுமார் 70 பேருக்கு நோய்த் தோற்று பரவியிருக்கிறது என்கிறார்கள் மருத்துவ அதிகாரிகள்.

ஊரடங்கை  மதிக்காமல் திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்த நாள் விழா என்று கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கொல்லாலா மாமிடாடா கிராமமே இப்போது பெருந்துயரத்தில் சிக்கியுள்ளது. சமூக இடைவெளியைப் பின்பற்றி, நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்வோம்!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments