முகமூடி கொள்ளை கும்பல் சிக்கியது..!

0 8299

திண்டுக்கல் மாவட்டம் அகரம் அருகே பூசாரி வீட்டில் இருந்தவர்களை மிரட்டி கத்தி முனையில் கொள்ளையடித்த முகமூடி கும்பலை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் அகரம் பேரூராட்சி அருகே உள்ள சுக்காம்பட்டியில் துரைஆதித்தன் என்பவர் வசித்து வருகிறார். கோவில் பூசாரி மற்றும் சித்தர் எனக் கூறப்படும் இவர், தனது வீட்டருகே வாஸ்தீஸ்வரர் கோவில் ஒன்றைக் கட்டி அதில் பூசாரியாக இருந்து வருகிறார். வீடு கட்டுவதற்கான வாஸ்து பார்ப்பது, குறி கேட்பது போன்ற காரியங்களுக்கான அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் இவரை நாடி வருவார்கள் என்று கூறப்படுகிறது.

தனது வீட்டில் மனைவி, மகன், மகள் மற்றும் மருமகன் ஆகியோருடன் வசித்து வருகிறார். பிற்பகல் அனைவரும் வீட்டில் இருந்த போது, 7 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று முகமூடி அணிந்த படி வந்துள்ளது. திடீரென வீட்டிற்குள் புகுந்த அந்த கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி வீட்டில் இருந்தவர்களை வயர் டேக்கால் கட்டிப்போட்டுள்ளனர்.

தொடர்ந்து கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி பெண்கள் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த நகைகள் மற்றும் 35 லட்ச ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து விட்டு தப்பியோடியுள்ளனர்.

அவர்கள் வெளியேறும் போது துரைஆதித்தன் சத்தம் போட்டுள்ளார். ஆனால் அவர் சாமி வந்து அருள் வாக்கு சொல்வதாக நினைத்துக் கொண்டதாக அருகில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது 100 சவரன் நகை மற்றும் 35 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தார்.

மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரழைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கொள்ளை சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு டாடா ஏஸ் வாகனத்தில் வந்த ஒருவர் அருகில் இருந்த கடையில் தண்ணீர் பாட்டில் வாங்குவது போல் பாவனை செய்து நோட்டம் பார்த்துள்ளார். அப்போது டவேரா வாகனத்தில் அந்த கொள்ளை கும்பல் செல்வதும், அந்தக் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சிசிடிவி காட்சிளைக்கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் காவல்துறையினர் பின்தொடர்ந்து வருவதை அறிந்த கொள்ளை கும்பல் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தச்சம்பட்டி காட்டுப்பகுதியில் பதுங்கியது.

அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கொள்ளையர்க 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கொள்ளையடித்த 53 சவரன் நகைகள், 35 லட்சம் ரூபாய் பணத்தை அவர்களிடம் இருந்து மீட்டனர்.

சிவகங்கை, பரமக்குடி, புதுக்கோட்டையை சேர்ந்த அவர்கள் ஐவரும் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இந்த கும்பலுடன் தொடர்புடைய மற்ற 2 கொள்ளையர்களை தேடி வருவதாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் ஷக்திகுமார் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments