கொரோனாவா? பசியா ? சென்னை ரிட்டன்ஸ் 456 பேர் மதுரையில் தவிப்பு..! தனிமை முகாமில் அடைப்பு

0 60592

முழு ஊரடங்கு காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் தென் மாவட்டங்களுக்குச் சென்ற 456 பேர், மதுரையில் தடுத்து நிறுத்தப்பட்டு தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டதால் வீடுகளுக்குச் செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர்.

நாளுக்கு நாள் சென்னையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருப்பதால் அதனை தடுக்கும் பொருட்டு, சென்னை காவல் எல்லைக்குட்பட்ட திருவள்ளூர் , செங்கல்பட்டு மாவட்டங்களின் சில பகுதிகளையும் சேர்த்து 12 நாட்கள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து முழு ஊரடங்கிற்கு முன்பாக சொந்த ஊருக்குச் சென்றுவிட வேண்டும் என்று, கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் மூட்டை முடிச்சுகளோடு பலர் அவசர அவசரமாக புறப்பட்டுச் சென்றனர். சென்னையை விட்டு போனால் போதும் என்று புறப்பட்ட சுமார் 456 பேர், மதுரை அருகே நடுவழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுடன் அவர்கள் அனைவரும் மதுரை வேளாண்மைக் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை அங்கு 7 நாட்கள் தனிமைப்படுத்தி தங்கி இருக்க போலீசார் உத்தரவிட்டனர்.

அங்கு போதிய கழிவறை வசதி இல்லையென்றும், வெந்நீர் வசதி இல்லையென்றும் குற்றஞ்சாட்டிய சிலர், தங்களால் அங்கு தங்க இயலாது என உள்ளே செல்ல மறுத்தனர்.

இங்கு தங்கி இருந்தால் தங்கள் அனைவருக்கும் மொத்தமாக கொரோனா வந்து விடும் என்று அஞ்சுவதாக சிலர் தெரிவித்தனர்.

தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் மூன்று வேளையும் முறையாக உணவு கிடைத்தால் போதும், ஒரு மாதம் கூட தங்கி இருக்க தயார் என்று ஒருவர் கூறியது, அவர் வேலை இழந்து தவிப்பதன் வலியை உணர்த்துவதாக இருந்தது.

நாகர்கோவிலுக்குப் புறப்பட்ட பெண் ஒருவர், தனது குழந்தைகளின் நலன் கருதியாவது குடும்பத்துடன் ஊருக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

சென்னையில் கொரோனாவுக்கு அஞ்சுவதா அல்லது வாழ்வாதாரத்துக்கு அஞ்சுவதா என குடும்பத்துடன் சொந்த ஊருக்குப் புறப்பட்டதாகவும், வழியிலேயே தங்களை மறித்து வைத்திருப்பது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் மற்றொருவர் தெரிவித்தார்.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக, ஊரடங்கிற்கு முந்தையநாள் சென்னையில் இருந்து இ-பாஸ் பெற்றுக் கொண்டு மீசையை முறுக்கிக் கொண்டு சொந்த ஊர் நோக்கிப் பறந்த ஒருவர், நடுவழியில் மறிக்கப்பட்டு முகாமில் அடைக்கப்பட்டதால் , சிறைப்பறவை போல ஜன்னல் கம்பிகளுக்குள் இருந்தவாறு தனது உரிமைக்குரலை உரக்க எழுப்பினார்.

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பலர், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து செல்கிறர்கள் என்பதை தாங்கள் உணர்ந்திருந்தாலும், இவர்களால் அந்த கிராமங்களில் உள்ளோருக்கு கொரோனா தொற்று பரவி விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தின் காரணமாகவே, 7 நாட்கள் தனிமைப்படுத்தி, அதன் பின்னர் கொரோனா பரிசோதனை நடத்தி நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியான பின்னர், அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க இருப்பதாகத் தெரிவித்த மாவட்ட நிர்வாகத்தினர், தங்கி இருக்கும் நாட்களில் அவர்களுக்குத் தேவையான அனைத்து அடைப்படை வசதிகளும் முறையாக செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments