21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் பழனி உடல் நல்லடக்கம்

0 3136

லடாக் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருடன் நடந்த மோதலில் உயிரிழந்த தமிழக வீரர் பழனியின் உடல் அவரது சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

லடாக்கில் வீரமரணம் அடைந்த 20 வீரர்களில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூரைச் சேர்ந்த பழனியும் ஒருவர். அவரது உடல் நேற்று டெல்லியில் இருந்து ராணுவ விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் இன்று அதிகாலை கடுக்கலூர் கொண்டு வரப்பட்டது. பழனியின் உடலுக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பழனியின் உடல் அடங்கிய பெட்டியின் அருகில் ராணுவ வீரர்கள் குழலிசைத்து அஞ்சலி செலுத்தினர்

சவப்பெட்டி மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி பழனியின் மனைவி வானதி தேவியிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க உயிர்த் தியாகம் செய்த பழனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பழனியின் உடல் அடக்க நிகழ்ச்சியில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர், அரசியல் கட்சியினர், சுற்றுவட்டாரப் பொதுமக்கள் பலர் திரளாகப் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments