'ஆயிரத்த வச்சிக்கிட்டு மத்தது எல்லாத்தையும் கொடுத்துடுவேன்' - மூன்றாவது முறையாக கொரோனா நிதி வழங்கிய பூல்பாண்டியன்! 

0 9580
யாசகர் பூல்பாண்டியன்

கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு நல் உள்ளங்களை உலகத்துக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. அவர்களில் ஒருவர் தூத்துக்குடியைச் சேர்ந்த யாசகம் பெற்று வாழும் பூல்பாண்டியன் ஐயா. தான் சிறுகச் சிறுக ஒவ்வொருவரிடமும் கெஞ்சி யாசகம் பெற்றுச் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கி அனைவருக்கும் முன்னுதாரணமாக வாழ்கிறார். இதற்கு முன்பு இரண்டு முறை கொரோனா நிவாரணத்துக்கு நிதி வழங்கியிருக்கும் பூல்பாண்டியன் தற்போது மூன்றாவது முறையாக ரூ.10,000 - த்தை வழங்கி அனைவரையும் நெகிழச்செய்திருக்கிறார்.

image

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். சுமார் 65 வயதாகும் பூல்பாண்டியனுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கிறார்கள். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சில வருடங்களுக்கு முன் மனைவியும் இறந்துவிட்டார். அதன் பிறகு அவர் ஊர் ஊராகச் சென்று யாசகம் செய்து வயிற்றைக் கழுவுவதோடு மட்டுமல்லாமல் மிஞ்சும் பணத்தில் தர்மம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.

தமிழகக் கோயில்கள் முன்பு யாசகம் பெற்று வாழும் பூல்பாண்டியன் அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்குப் பல முறை  நிதி உதவி செய்திருக்கிறார். புயல் வெள்ளம் ஆகியவற்றின் போது கூட தன்னிடம் இருந்த சேமிப்பை மக்களுக்கு வழங்கி உதவி செய்தார். 

image

அதன்பிறகு கொரோனா பிரச்னை தொடங்கியது முதல் மதுரையில் தங்கி, யாசகம் பெற்றார். அப்படிக் கிடைக்கும் பணத்தை அவ்வப்போது மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கி வருகிறார். இதற்கு முன்பு மே மாதம் ரூ.10,000 - த்தை வழங்கினார். அதிலிருந்து தற்போது மூன்றாவது முறையாக ரூ.10,000 - ஐ வழங்கி அனைவரையும் நெகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறார்.

இந்த தானம் குறித்து பூல்பாண்டியனிடம் கேட்டால், "என் செலவுக்கு ஆயிரத்தை வைத்துக்கொள்வேன். அதற்கு மேல் கிடைக்கும் அனைத்தையும் நிவாரண நிதிக்கும் பள்ளி மேம்பாட்டுக்கும் கொடுத்துவிடுவேன்" என்கிறார் கள்ளங்கபடமற்ற சிரிப்புடன்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments