கொரோனா நோயாளிகள்: பாதிப்புகள் பல விதம்

0 4087

கொரோனா தொற்று ஏற்படும்போது, அறிகுறிகள் வெளிப்படும் கொரோனா நோயாளிகள், பெரும்பாலும் 4 வகையான பாதிப்புகளை எதிர்கொள்வதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில், சுமார் 80 சதவீதம் பேருக்கு அறிகுறிகள் ஏதும் தென்படுவதில்லை.

மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் பயணங்கள் மேற்கொள்ளும்போது அல்லது பாதிக்கப்பட்டவர்களின் சுற்றுப்புறத்தில் இருந்ததால் அல்லது வேறு ஏதேனும் சிகிச்சைகளுக்காக செல்லும்போது கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அப்படி பரிசோதனை செய்யும்போதே, அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர்.

அதேசமயம், வாசனை மற்றும் சுவையை உணர முடியாமல் போதல் உள்ளிட்ட
அறிகுறிகள் வெளிப்படும் கொரோனா நோயாளிகள், பெரும்பாலும் 4 வகையான பாதிப்புகளை எதிர்கொள்வதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில், முதல் வகையினருக்கு, தொண்டை வலி மட்டுமே இருந்து, 2 நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும். பிறகு நோயில் இருந்து குணமடைந்து விடுகின்றனர்.

இரண்டாவது வகையினரைப் பொறுத்த வரையில், பாதிக்கப்பட்ட முதல் சில நாட்களில் ஃபுளூ அறிகுறியுடன் சளித்தொந்தரவு, லேசான காய்ச்சல் இருக்கும். ஆனால் அதன் பிறகு வேறு ஏதேனும் அறிகுறியோ பாதிப்புகளோ ஏற்படுவதில்லை.

மூன்றாவது வகையினரைப் பொறுத்தவரையில், 10 நாட்களுக்கும் மேலாக லேசான காய்ச்சலுடன், லேசான ஃபுளூ சளி-காய்ச்சல் அறிகுறிகளுடன் இருப்பார்கள். இப்படிப்பட்ட அறிகுறிகளுடன் கூடிய கொரோனா நோயாளிகள், நோயுடன் போராடி பெரும்பாலும் குணமடைந்து விடுகின்றனர், இறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது.

நான்காவது வகையினரைப் பொறுத்தவரை, இரண்டு நாட்கள் காய்ச்சல், 4ஆவது நாளில் இருமல், 5 மற்றும் 6வது நாளில் சிறுசிறு வேலை செய்தால் கூட மூச்சு விடுவதில் சிரமம், 8, 9ஆவது நாளில் ARDS எனப்படும் தீவிர மூச்சு முடக்க நோய்க்குறியீடு ஏற்பட்டு 10ஆவது நாளில் மரணம் ஏற்படுகிறது.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களை கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது, உடல் பருமனாக உள்ளவர்கள் மத்தியில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இதேபோல, நீரிழிவு மற்றும் CAD எனப்படும் இதயநோய் உள்ள நோயாளிகளை காட்டிலும், உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மத்தியில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

தொடக்கத்திலேயே மார்பக எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் எடுத்து, தொடக்கத்திலேயே சிகிச்சை தொடங்கும்போது இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாமதிக்கும்போது, நுரையீரல் திசுக்களில் சேதம் ஏற்பட்டு, ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு குறையும் பிரச்சனை அதிகமாகி இதய செயலிழப்பில் கொண்டுபோய் விட்டு விடலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆரோக்கியமான நபர்களுக்கு ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு 94 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை இருக்கும். இந்த அளவு 92 சதவீதத்திற்கும் குறைவாக இருந்து, மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பவர்களுக்கு குப்புறபடுக்க வைக்கப்பட்ட நிலையில், மூக்கு வழியாக ஆக்சிஜன் செலுத்தும்போது அது நல்ல பலனைத் தருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று இருந்து, ஆனால் அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில், ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு குறைவாக இருப்பவர்கள் உடற்பயிற்சி, உடல் உழைப்பை தவிர்க்க வேண்டும். இல்லை எனில் உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்பை அதிகரித்து விடும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments