2 வழித்தடங்களில் சிறப்பு பயணிகள் ரயில் இயக்கம்..!

0 13118

தமிழகத்தில் இன்று முதல் திருச்சி - செங்கல்பட்டு, அரக்கோணம் - கோவை ஆகிய இரண்டு வழித்தடங்களில் 3 சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஜூன் -1 ம் தேதி முதல் 4 வழித்தடங்களில் சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக 3 சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்திருந்தது.

இதற்கான முன்பதிவு கடந்த 10-ம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், இன்று முதல் திருச்சி - செங்கல்பட்டு இடையே 2 ரயில்களும், அரக்கோணம் - கோவை இடையே ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.

காலை 7 மணிக்கு 271 பயணிகளுடன் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் பிற்பகல் 2 மணியளவில் கோவை சென்றடையும். அதே ரயில் மறு மார்க்கத்தில் கோவையில் 3.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 10 மணிக்கு அரக்கோணம் ரயில் நிலையம் வந்தடையும்.

திருச்சியில் இருந்து காலை 6.30 மணிக்கு 43 பயணிகளுடன் புறப்பட்ட சோழன் எக்ஸ்பிரஸ் 11 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையம் சென்றது. மேலும், 63 பயணிகளுடன் காலை 7 மணிக்கு புறப்பட்ட பல்லவன் எக்ஸ்பிரஸ் 11.30 மணியளவில் செங்கல்பட்டு சென்றது.

பயணிகள் காய்ச்சல் பரிசோதனைக்கு பிறகே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும், இ பாஸ் வைத்திருந்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு ரயில்கள் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments