சுமார் 80 நாட்களுக்குப் பின்.. வழிபாட்டுத் தலங்கள் திறப்பு..!

0 4168

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சுமார் 75 நாட்களுக்குப் பின் இன்று வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்து வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டதால் மார்ச் மாத இறுதியில் வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன. ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதையடுத்து நாட்டின் பல்வேறு மாநிலங்ககளில் இன்று வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. பஞ்சாபின் லூதியானாவில் உள்ள துர்க்கா மாதா கோவிலில் தீபாராதனையுடன் வழிபாடு நடைபெற்றது. இதில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

உத்தரக்கண்ட் மாநிலம் டேராடூனில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களைத் தவிர மற்ற கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. மாதா வைஷ்ணவ தேவி கோவில் காலை 7 மணிக்கே திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது. குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் உள்ள கோரகநாதர் கோவிலில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிறப்பு வழிபாடு நடத்தினார். பொதுமக்களும் சமூக விலகலைக் கடைப்பிடித்து வழிபட்டு வருகின்றனர்.

சீக்கியர்களின் புனிதத் தலமான பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் வழிபாட்டுக்காகத் திறக்கப்பட்டுள்ளது. சமூக விலகலைக் கடைப்பிடித்துப் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

லக்னோ ஈத்கா மசூதியில் வெப்பநிலை கண்டறியும் சோதனைக்குப் பின்னரே பொதுமக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். சமூக விலகலைக் கடைப்பிடித்துத் தொழுகையில் ஈடுபட்டனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி புனித நூல்களைக் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை.

டெல்லி கால்காஜி கோவிலில் வெப்பநிலை கண்டறியும் சோதனைக்குப் பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி பக்தி நூல்களைக் கொண்டுசெல்லவும், சிலைகளைத் தொட்டு வணங்கவும், பக்திப் பாடல்களைப் பாடவும் அனுமதிக்கப்படவில்லை. இதேபோல் சாந்தினிசவுக்கில் உள்ள கவுரி சங்கர் கோவிலும் இன்று திறக்கப்பட்டதால் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

டெல்லி பங்களாசாகிப் குருத்துவாரா மீண்டும் திறக்கப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் இன்று வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. பெங்களூர் பசவணகுடியில் உள்ள தொட்ட கணபதிகோவிலில் பக்தர்கள் வரிசையாக நின்று சமூக விலகலைக் கடைப்பிடித்து வழிபாடு நடத்தினர்.

டெல்லி ஜாமா மசூதி தொழுகைக்காக மீண்டும் திறக்கப்பட்டது. அரசின் வழிகாட்டுதலின்படியும் போதிய முன்னெச்சரிக்கையுடனும் மக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி கான் மார்க்கெட்டில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயம் மீண்டும் திறக்கப்பட்டது. கிறித்தவ மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடித்து ஆராதனை நடத்தினர்.

பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள செயின்ட் மேரி தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையில் குறைவான எண்ணிக்கையிலான கிறித்தவர்கள் கலந்துகொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments