அடுத்தடுத்த போராட்டங்களால் அதிரும் அமெரிக்கா..!

0 3017

அமெரிக்காவில் போலீசாரால் கொல்லப்பட்ட கருப்பினத்தை சேர்ந்தவரின் மரணத்திற்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டங்கள் மேலும் வலுவடைந்துள்ளன. நிறவெறி மற்றும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ளன.

அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் போலீசாரால் மிதித்துக் கொல்லப்பட்ட கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாயிட் மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 10 நாட்களாக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நேற்று நடந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் லாஸ் ஏஞ்சல்ஸின் ஹாலிவுட் சுற்றுப்புறத்தில் இனவெறிக்கும், போலீசாரின் நடவடிக்கைகளுக்கும் எதிராக பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர். அப்போது நடந்த பேரணியில் போலீசாரும் பங்கேற்றனர்.

தலைநகர் வாஷிங்டனில் பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் நிறவெறிக்கு எதிராக ஆரவாரமாக ஆர்ப்பரித்தபடி சென்றனர்.

இதேபோல் இங்கிலாந்து தலைநகர் லண்டனிலும் நிறவெறி மற்றும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்துள்ளன. நாடாளுமன்ற சதுக்கத்தின் முன் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் ஒற்றுமையையும், நிறவெறிக்கு எதிர்ப்பையும் ஒருசேர பதிவு செய்தனர்.

லண்டனில் நடந்த மற்றுமொரு போராட்டத்தில், பேரணியாகச் சென்றவர்களைக் கட்டுப்படுத்த குதிரைப்படை போலீசார் முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் குதிரையிலிருந்த பெண் காவலர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். மேலும் பயந்த குதிரையும் கட்டுக்கடங்காமல் ஓடியதில் பொதுமக்கள் சிலரும் காயமடைந்தனர்.

நிறவெறிக்கு எதிரான போராட்டம் அமெரிக்கா, இங்கிலாந்தில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வேகமாகப் பரவி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments