'எனக்கு அந்த வலி தெரியும்!' - இறந்து கிடந்த தாயை எழுப்பிய சிறுவனை ஷாருக் தத்தெடுத்த பின்னணி

0 28586

பிஹார் மாநிலத்தில் முஷாஃபர்பூர் ரயில் நிலையத்தில் இறந்து போன தாயை எழுப்ப சிறுவன் முயற்சித்த வீடியோ இணையத்தில் பரவி வைரலானது. இந்த காட்சியை பார்த்த பல பெண்கள் கண்ணீர் விட்டு அழுதே  விட்டனர். பாலிவுட் நடிகர் ஷாருக்கானையும் இந்த சம்பவம் வெகுவாக பாதித்து விட்டது.

உடனடியாக, தன்னுடைய மீர் ஃபவுண்டேசன் மூலமாக அந்த சிறுவனை தத்தெடுத்துக் கொண்டார். ஷாருக்கான் செய்த ட்விட் பதிவில், '' சிறுவனை தொடர்பு கொள்ள உதவிய அனைவருக்கும் நன்றி. சிறுவயதில் பெற்றோரை இழந்தால், அதன்  வலி எனக்கு தெரியும். இழப்பில் இருந்து சிறுவன் மீண்டு வர உதவுவோம்'' என்று கூறியிருந்தார்.

ஷாருக்கானும் இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தவர்தான்.  தன்னுடைய  15 வயதில் ஷாருக்கான்  தந்தை மீர் தாஜ் முகமது கானை இழந்தார். 26 வயதில் தாயையும் இழந்த ஆதரவற்றவராகி விட்டார். ஷாருக்கானின் தாயும் தந்தையும் புற்றுநோயால் இறந்து போனார்கள் . தற்போது, உச்ச நடிகராக இருக்கும் ஷாருக்கான் சாதாரண பணியாளராக பாலிவுட்டில் வாழ்க்கையை தொடங்கியவர். 

1980- ம் ஆண்டு பிரபல பாடகர் பங்கஜ் உதாஸ் இசை நிகழ்ச்சியில் வேலை பார்த்ததற்காக அவருக்கு ரூ. 50 சம்பளம் வழங்கப்பட்டது. இதுதான், பாலிவுட்டில் ஷாருக்கான் வாங்கிய முதல் சம்பளம். பின்னர், பல போராட்டங்களை கடந்து 1992- ம் ஆண்டு 'தீவானா' படத்தின்  மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். அதற்கு பிறகு, ஷாருக்கான் திரும்பி பார்க்கவே இல்லை. 

பாலிவுட்டில் கோடி கோடியாக சம்பாதித்தார். ஆனாலும், இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த வருத்தமும் மன வேதனையும் அவரிடத்தில் இருந்து மறையவில்லை. அதனால்தான், தன் தந்தை பெயரிலேயே மீர் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையை தொடங்கி, ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தத்தெடுத்து வளர்ப்பதோடு மீர் அறக்கட்டளையின் பணி முடிந்து விடுவதில்லை. குழந்தைகளின்  ' பெற்றோர் இல்லையே! 'என்கிற ஏக்கத்தை தீர்ப்பதுதான் இந்த ஃபவுண்டேசனின் முதன்மையான பணியாக இருக்கிறது. 

இது குறித்து, ஷாருக் கூறுகையில், '' நான் சிறுவனாக இருந்த போது, என் தந்தையை இழந்தேன். இளைஞனாக வளர்ந்த போது தாயை இழந்தேன்.  அதனால்தான், இப்போது எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்கிறேன் .  மீர் அறக்கட்டளை குழந்தைகளையும் பெற்றோர் இல்லாத ஏக்கம் பாதித்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன் '' என்றார். 

கொரோனா பேரிடர் காலத்தில் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் , மீர் அறக்கட்டளை , ரெட் சில்லிஸ் வி. எஃக்.எக்ஸ் நிறுவனங்கள் பல்வேறு நலப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மகாராஸ்டிர மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த போராடும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்காக 25,000 பி.பி.இ கிட்டுகளை ஷாருக்கான் வழங்கியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments