பசியுடன் வந்த கர்ப்பிணி யானையை வெடி வைத்து கொன்ற கொடூரம்..!

0 16182

கேரள மாநிலம் மலப்புரத்தில் வெடிமருந்து வைத்து கொடுத்த அன்னாசி பழத்தை உண்டதால் காயமடைந்து கர்ப்பிணி யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் மன்னார்கட் வனப்பகுதியில் இருந்து அருகில் உள்ள கிராமத்திற்கு கர்ப்பமடைந்திருந்த யானை ஒன்று கடந்த மே மாத இறுதியில் வந்துள்ளது. பசியில் அலைந்து திரிந்த யானைக்கு அப்பகுதியை சேர்ந்த சிலர், சிறிதும் இரக்கமின்றி அன்னாசிப் பழத்திற்குள் வெடிமருந்தை வைத்து கொடுத்துள்ளனர்.

அதனை நம்பிக்கையுடன் யானை வாங்கி உட்கொண்ட போது வெடித்ததால், அதன் தாடைப் பகுதி சிதைந்து விட்டது. பலத்த காயமடைந்த போதும் அந்த கிராம மக்கள் யாரையும் யானை காயப்படுத்தவில்லை. எதையும் சேதப்படுத்தவும் இல்லை. வேறு எதையும் உண்ண முடியாமலும், வேதனையை தாங்க முடியாமலும் தண்ணீரைத் தேடி அந்த யானை பல்வேறு இடங்களில் அலைந்துள்ளது.

கடந்த மே மாதம் 23 ஆம் தேதி தான் அந்த யானை பலத்த காயமடைந்திருந்த விவரம் வனத்துறைக்கு தெரியவந்தது. யானையை தேடிச் சென்ற போது அது வாயில் ஏற்பட்ட ரணத்தை தணிப்பதற்காக வெள்ளியாற்றில் தண்ணீருக்குள் இறங்கி நின்று கொண்டிருப்பது தெரியவந்தது.

மிகவும் பலவீனமடைந்து உடல் சுருங்கிய நிலையில் இருந்த அந்த யானையை சுரேந்திரன் மற்றும் நீலகாந்தன் என்ற 2 கும்கி யானைகள் உதவியுடன் தண்ணீரில் இருந்து வெளியே கொண்டு வர வனத்துறையினர் முயற்சித்தனர். ஆனால் தண்ணீரில் நின்றபடியே அந்த யானை பரிதாபமாக இறந்தது. அதைப் பார்த்து உடன் இருந்த கும்கி யானைகளும் கண்ணீர் விட்டன. கடந்த மே மாதம் 27 ஆம் தேதி நிகழ்ந்த இந்த சோக சம்பவம் காண்போரின் நெஞ்சை உருக்கும் விதத்தில் உள்ளது.

இதையடுத்து அந்த யானையின் உடல் 2 மருத்துவர்களால் கூறாய்வு செய்யப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, காயமடைந்த யானையின் முகத்தில் தெரிந்த வலியை தங்களால் உணர முடிந்தது என்று நிலாம்பூர் வன அதிகாரி மோகன் கிருஷ்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு மனிதனாக அதனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அவர் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோரின் நெஞ்சை நெகிழச் செய்துள்ளது. யானையின் மரணத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியதுடன், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தியுள்ளனர். மனிதனை நம்பிய யானைக்கு மனிதன் துரோகம் இழைத்து விட்டதாக சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.

இந்த நிலையில் யானையின் மரணம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வனஉயிர்ப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments