தடையை மீறி கூட்டு ஜெபம்.. பாதிரியார் கைது..! 30 பேர் மீது வழக்கு

0 4915
தடையை மீறி கூட்டு ஜெபம்.. பாதிரியார் கைது..! 30 பேர் மீது வழக்கு

திருப்பூரில் தடையை மீறி கூட்டு ஜெபம் செய்த பாதிரியார் உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கூட்டு வழிபாடு நடத்திய 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பெரும்பாலான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள், மால்கள், பொழுதுபோக்கு பூங்காக்களைத் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

குறிப்பாக வழிபாட்டுத் தலங்களை வரும் 8ந்தேதி திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ள போதிலும், தமிழக அரசு இதுகுறித்த அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், திருப்பூர் அவினாசி ரோடு குமரன் நகரில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலயத்தில் தடையை மீறி தேவாலயம் திறக்கப்பட்டது.

பாதிரியார் வில்சன்குமார் தலைமையில் கூடிய 30 பேர் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். உலக நன்மைக்காக ஜெபம் செய்து கொண்டிருந்த போது, சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு அதிரடியாக நுழைந்த திருப்பூர் வடக்கு காவல்துறையினர் ஊரடங்கு அமலில் இருக்கும் போது தடையை மீறி தேவாலயத்தை திறந்து, நோய்த்தொற்று ஏற்படுத்தும் விதமாக கூட்டுப் பிரார்த்தனை நடத்தியது தவறு என சுட்டிக்காட்டி கலைந்து போக செய்தனர்.

ஜெபக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த பாதிரியார் வில்சன் குமார், ஜேசு பாலன், பிரேம்குமார், மனோ, வில்சன், செல்வகுமார், குணசேகர் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஜெபக்கூட்டத்தில் பங்கேற்ற 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஆன்மீக வழிபாடு நடத்துபவர்கள் ஊரடங்கை மீறி மக்களை கூட்டினால் நிச்சயம் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்த காவல்துறையினர், பாதிரியார் உள்ளிட்ட 7 பேரையும் கொரோனா காரணமாக நீதிமன்றம் அழைத்துச் செல்லாமல் காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம், சென்னை திருவிக நகர் மண்டலத்தில் தடையை மீறி நடந்த ஞாயிறு ஜெபக்கூட்டம் ஒன்றின் வாயிலாக மட்டும் 40-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியது குறிப்பிடத்தக்கது. தற்போது திருவிக நகர் மண்டலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,556 ஐ தாண்டி இருப்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments