சென்னை தவிரப் பிற பகுதிகளில்.. ஜூன் 1 முதல் பல்வேறு தளர்வுகள்..!

0 4004

தமிழகத்தில் சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிரப் பிற பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஜூன் ஒன்றாம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

தொழில் நிறுவனங்கள் நூறு விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நூறு விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும். அனைத்துத் தனியார் நிறுவனங்களும் நூறு விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதைத் தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். வணிக வளாகங்களைத் தவிர்த்து, அனைத்துப் பெரிய கடைகள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம்.

ஒரே நேரத்தில் அதிகப்பட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்க வேண்டும். தகுந்த சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் அனுமதிக்க வேண்டும். கடைகளில், குளிரூட்டியை இயக்கக் கூடாது. காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது.

டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம். தேநீர்க் கடைகள், உணவு விடுதிகளில் ஜூன் 7ஆம் தேதி வரை பார்சல்களில் வழங்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஜூன் 8 முதல் உணவகங்களில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. உணவகங்களில் குளிரூட்டிகளை இயக்கக் கூடாது.

ஜூன் 8 முதல் தேநீர்க் கடைகளில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து அருந்துவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது. வாடகைக் கார்கள் ஓட்டுநரைத் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்சாவும் அனுமதிக்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments