திருச்சி நெடுஞ்சாலையில்.. பதுங்கி பாயும் பலாத்கார கொள்ளையர்..! வாகன ஓட்டிகளே உஷார்

0 55071

திருச்சி பைபாஸ் சாலையில் மணிகண்டம் பகுதியில் நிறுத்தப்படும் கார் மற்றும் இருசக்கரவாகனங்களில் செல்லும் பயணிகளை கத்திமுனையில் மிரட்டி கொள்ளையடித்துவிட்டு அத்துமீறும் பலாத்கார கொள்ளையர்கள் காவல்துறையினரிடம் சிக்கி உள்ளனர். புதருக்குள் மறைந்திருந்து பதுங்கி பாய்ந்தவர்களுக்கு மாவுக்கட்டு போடப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே E. மேட்டுபட்டியை சேர்ந்த தனியார் நிறுவன பெண் ஒருவர் தனது காதலருடன் பணி முடிந்து இரவு நேரத்தில் திருச்சி பைப்பாஸ் சாலைவழியாக வீட்டுக்கு செல்வது வழக்கம்.

அப்போது மணிகண்டம் பகுதியில் பைபாஸ் சாலையோரம் புதர்மண்டி கிடக்கும் பகுதியில் இருவரும் தனிமையை கழித்துச்செல்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. வியாழக்கிழமை இரவு பணி முடிந்து அந்த பெண் தனது காதலருடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.

திருச்சியில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி பயணித்து மணிகண்டம் பகுதியில் சாலையோரம் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.

இதனை அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர் பார்த்து அவர்களை பின் தொடர்ந்து காட்டுப் பகுதிக்குள் மறைந்திருந்துள்ளனர். காதல் ஜோடிகள் மெய் மறந்து இருந்த நேரத்தில், காதல் ஜோடி மீது பாய்ந்த 3 பேரில் ஒருவன் கத்திமுனையில் காதலனை மிரட்டி கட்டிப்போட்டுள்ளான். பின்னர் மூவரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

காதலர்கள் அணிந்திருந்த நகை, பைக், மணிபர்ஸ் உள்ளிட்டவற்றை பறித்துக்கொண்டு பலாத்கார கொள்ளையர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். காதலர்கள் இருவருக்கும் திருமணமாகி தனி தனியாக குடும்பம் இருப்பதால் விஷயம் வெளியே தெரிந்தால் குடும்பத்தில் வில்லங்கம் வந்து விடும் என்று தனித்தனியாக விராலிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

போலீசாரின் விசாரணையில் இருவரும் உண்மையை கக்கிவிட்டனர். தங்களுக்கு நேர்ந்த கொடுமையை கூறி கதறி அழுதுள்ளனர். இதையடுத்து புதர் பகுதியில் ஏராளமான போலீசார் ஆயுதங்கள் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபொழுது, இருசக்கரவாகனத்தில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரித்த போது அவர்கள் திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த முருகன், நந்தகுமார், ஹேமராஜ் என்பதும், திருச்சி பைபாஸ் சாலையில் புதரில் பதுங்கி இருந்து வாகன ஓட்டிகளை தாக்கி நகை, பணம் பறிக்கும் பலாத்கார கொள்ளையர்கள் என்பதும் தெரியவந்தது.

இரவு நேரங்களில் அந்த பகுதியில் இருசக்கரவாகனமோ, காரோ நிறுத்தப்பட்டிருந்தால் அதனை நோட்டமிட்டு அங்கிருக்கும் ஜோடிகளை கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் நகை பணத்தை பறித்து கொள்வதை வாடிக்கையாக செய்து வந்துள்ளனர். தனிமையில் இருக்கும் ஜோடிகள் என்றால், பெண்ணை பலாத்காரம் செய்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக செய்து வந்துள்ளனர்.

பலர் அவமானத்துக்கு பயந்து இந்த கொடூர கொள்ளையர்கள் மீது புகார் ஏதும் அளிக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்கள் கூட நடந்த சம்பவத்தை கூறாமல் நகை பணம் மட்டுமே களவு போனதாக புகார் அளித்ததாகவும், போலீசாரின் விசாரணையில் தான் அங்கு நடந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

முன்னதாக போலீசார் சுற்றி வளைத்த போது இரு சக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்றதால் சறுக்கி விழுந்த இருவரின் இடது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிவித்த போலீசார், அவர்களை தூக்கிச்சென்று மாவுக்கட்டு போட்டதாக தெரிவித்தனர்.

இது போன்ற புதர்பகுதிகளுக்கு தனிமை தேடிச்செல்லும் விபரீத காதல் ஜோடிகளுக்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை பாடம். அதே நேரத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் பெண்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள் இது போன்ற ஆளரவமற்ற பகுதிகளில் வாகனத்தை நிறுத்துவதை தவிர்ப்பது நலம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments