ஆவணம் அசல்... வாகனம் போலி.! யூ-ட்யூப் பார்த்து நூதன திருட்டு.!

0 3349
யூடியூபை பார்த்து நூதன முறையில் வாகனங்களைத் திருடி, அவற்றின் அடையாளங்களை மாற்றி, ஓ.எல்.எக்ஸில் விளம்பரம் செய்து விற்பனை செய்து வந்த திருடனை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.

யூடியூபை பார்த்து நூதன முறையில் வாகனங்களைத் திருடி, அவற்றின் அடையாளங்களை மாற்றி, ஓ.எல்.எக்ஸில் விளம்பரம் செய்து விற்பனை செய்து வந்த திருடனை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் வாகனத் திருட்டு என்பது அன்றாடம் அரங்கேறும் நிகழ்வாக மாறியுள்ளது. வாகனங்களைத் திருடுபவர்கள், அதன் உதிரி பாகங்களை தனித்தனியாக கழற்றி விற்றுவிடுவது வழகம்.

இந்த முறையில் வாகனத் திருடர்கள் போலீசாரிடம் சுலபமாக சிக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். அதனைத் தவிர்க்க, சற்று வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டுள்ளான் தற்போது சிக்கியுள்ள நபர்.

சென்னை கொரட்டூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்கிற அந்த நபர், தியாகராய நகர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பார்க்கிங்கில் லாக் செய்யப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களில் இருந்து முதலில் ஆர்.சி புத்தகங்களை திருடி சேகரித்து வைத்துக்கொள்வது வழக்கம்.

பின்னர் அதே மாடல் வண்டிகள் எங்கேனும் சாவியோடு நிறுத்தப்பட்டிருந்தாலோ, அல்லது தாம் வைத்திருக்கும் டூப்ளிகேட் சாவிகளுக்கு பொருந்திப் போனாலோ அந்த வாகனங்களைத் திருடி, கைவசம் உள்ள ஆர்.சி. புத்தகத்தில் உள்ளவாறு, வாகனத்தின் பெயிண்ட், பதிவு எண், என்ஜின் சேஸிஸ் எண் உள்ளிட்டவற்றை மாற்றிவிடுவான்.

இறுதியாக அந்த வாகனங்களை புகைப்படம் எடுத்து, ஓ.எல்.எக்ஸில் பதிவேற்றி, விற்றுவிடுவான் என்கின்றனர் போலீசார். ஆர்.சி புத்தகங்களைப் பறிகொடுத்தவர்கள் வேறு ஒன்றை விண்ணப்பித்து பெற்றுக்கொள்வர்.

அதிலுள்ள விவரங்களைக் கொண்டு மாற்றியமைக்கப்பட்ட வாகனமும் போலீசாரின் சந்தேக வளையத்துக்குள் வராது. வாகனங்களைப் பறிகொடுத்தவர்களாலும் கடைசி வரை தங்களது வாகனத்தை அடையாளம் காண முடியாது என்பது ரமேஷின் எண்ணம்.

ஓ.எல்.எக்ஸில் வாகனங்களை விற்பனை செய்வதற்கென்றே ஏராளமான சிம் கார்டுகளை வாங்கி வைத்துள்ளான் ரமேஷ். ஒரு சிம் கார்டு கொண்டு ஓ.எல்.எக்ஸ் சில் ஐடி உருவாக்கி, ஒரு வாகனத்தை விற்றபின் அந்த சிம் கார்டு மூலமாக பேசிய உரையாடல், குறுஞ்செய்திகள் அனைத்தையும் அழித்துவிட்டு, சிம் கார்டையும் தூக்கிப் போட்டுவிடுவான் என்கின்றனர் போலீசார்.

இதனால் வாகனத்தை வாங்கிய நபர் போலீசிடம் சிக்கினாலும் மீண்டும் ரமேஷை தொடர்பு கொள்ள முடியாது. இப்படி ஓ.எல்.எக்ஸ் மூலம் ரமேஷ் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 22.

டிப்ளமோ மெக்கானிக்கான ரமேஷ், யூடியூபைப் பார்த்து வாகன திருட்டுக்கான பல்வேறு நுட்பங்களை கற்றுக்கொண்டு திருட்டில் ஈடுபட்டு வந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.

வாகனத் திருட்டு புகார் ஒன்றில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ரமேஷை போலீசார் மடக்கியுள்ளனர். அவனிடம் இருந்து 12 இருசக்கர வாகனங்கள், டிரில்லிங் இயந்திரம், சேஸிஸ் எண்களை மாற்றுவதற்கான டைகள் ( Dies ) பெயிண்ட்டுகள், கைக் கருவிகள் ( Tools like cutting plier, Screw driver etc.... ) 2 அசல் வாகன பதிவு புத்தகங்கள், 10 சிம் கார்டுகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவனிடம் இருந்து ஓ.எல்.எக்ஸ் மூலம் வாங்கப்பட்ட 3 திருட்டு வாகனங்களையும் அடையாளம் கண்டுள்ள போலீசார், அவற்றையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். 

ரமேஷ் போன்று நாள்தோறும் விதவிதமாக முளைக்கும் வாகனத் திருடர்களிடமிருந்து நமது வாகனங்களை பாதுகாத்துக் கொள்வது நமது கவனத்தில்தான் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments