ஒரே கிணற்றில் இருந்து அடுத்தடுத்த நாட்களில் மீட்கப்பட்ட 9 சடலங்கள்

0 2285

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில், பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேரின் சடலங்கள் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது, அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாரங்கல் மாவட்டம் கோரிகுண்டா என்ற இடத்தில், பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதியின் அருகே கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் நேற்று 4 சடலங்கள் மிதந்துள்ளன.

அவை, பீகாரை சேர்ந்த மசூத், அவருடைய மனைவி நிஷா, கணவனை விட்டு பிரிந்து வாழும் மகள் புஸ்ரா, புஸ்ராவின் மூன்று வயது மகன் ஆகியோரின் சடலங்கள் என்று சொல்லப்படுகிறது. தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார் 4 பேரின் சடலங்களையும் மீட்டுள்ளனர்.

இந்நிலையில், அதே கிணற்றில் இன்று மேலும் 5 சடலங்கள் மிதந்துள்ளன. அவற்றையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

9 பேரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனரா, கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டனரா, எப்போது நடைபெற்ற சம்பவம் என்பன உள்ளிட்ட விவரங்கள் மர்மமாக உள்ளன. போலீசார் விசாரணைக்குப் பிறகே மற்ற விவரங்கள் தெரியவரும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments