சிங்கிள் என ஏமாற்றி காதல் – பெண்ணின் குழந்தை கொலை..! காதலன் வெறிச்செயல்

0 8495

வேலூர் சத்துவாச்சாரி அருகே, தன்னை சிங்கிள் என கூறி இளைஞரை காதலித்து மணந்த பெண்ணின், 2 வயதுக் குழந்தையை காதலன் சுவற்றில் அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே காதலித்து மணந்த கணவரைப் பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றவருக்கு, இரண்டாவதாக மலர்ந்த காதலால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. 

வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவரது மகள் லாவண்யா. 20 வயதான இவர் கே.வி. குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவரைக் காதலித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், கே.வி.குப்பம் சீதாராம் பேட்டையில் இவர்கள் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தனர்

திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில், லாவண்யா தனது சகோதரியின் 2 வயதுப் பெண் குழந்தை ஒன்று தாய் வீட்டில் இருப்பதாகவும், தன் மீது அதிகம் பிரியம் வைத்திருப்பதால் அக்குழந்தையை வாங்கி வரும்படி கணவர் பிரவீன்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

குழந்தையை எடுத்து வந்து 4 நாட்களாக ஆசை ஆசையாய் லாவண்யா பராமரித்துள்ளார். இதனை பார்த்து பிரவீன்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு உண்மையான தாய் யார் ? எனக் கேட்டு தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, லாவண்யா தான் ஏற்கனவே சக்திவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கு பிறந்தது தான் இந்த குழந்தை என்றும் ஒப்புக்கொண்டார். மேலும் கணவரிடம் சண்டையிட்டு தாய் வீட்டுக்கு வந்த நேரத்தில், தான் திருமணம் ஆகாத சிங்கிள் என்று ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதையும், காதல் கணவர் பிரவீன்குமாரிடம் தெரிவித்துள்ளார். நம்பவைத்து ஏமாற்றிவிட்டதை அறிந்து நொந்து போன பிரவீன்குமார் தினமும் குடிபோதையில் வந்து லாவண்யாவிடம் சண்டையிட்டு வந்துள்ளான்.

இந்த நிலையில் செவ்வாய்கிழமை குடிபோதையில் வந்த பிரவீன் குமாருக்கும் லாவண்யாவுக்கும் வாய்த்தகராறு முற்றிய நிலையில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தையை பிடித்து தூக்கி வீசியுள்ளான் பிரவீன்குமார். சுவற்றில் தலை மோதியதால் பலத்த காயமடைந்த அந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது.

குழந்தையின் கொலையை மறைக்க திட்டமிட்ட லாவண்யாவும், பிரவின்குமாரும் சேர்ந்து, சடலத்தை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, குழந்தை குப்புற விழுந்து மயக்கம் அடைந்ததாக கூறியுள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் , அது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதிபடுத்தினர்.

இதற்கிடையே, தனது முதல் கணவரான சக்திவேலை தொடர்பு கொண்டு, குழந்தை தவறி விழுந்து இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார் லாவண்யா. அவரோ, தனது குழந்தையின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, உடற்கூறு ஆய்வுக்காக, வேலூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனைக்கு குழந்தையின் உடலைக் கொண்டு சென்றனர். அதில் குழந்தையின் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்ததாக தெரியவந்தது.

காவல்துறையினர் விசாரணையில், குழந்தை குப்புற விழுந்ததாக பொய் சொன்ன காதல் ஜோடி வசமாக சிக்கிக் கொண்டது. இதையடுத்து பெற்ற குழந்தையின் கொலையை மறைக்க முயன்ற கொலைகாரத் தாயையும், பிஞ்சுக் குழந்தையை சுவற்றில் அடித்துக் கொன்ற கொடூரக் காதலனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

குடியால் மதியிழந்து குழந்தையை கொன்று கொலைகாரனாகி இருக்கின்றான் கொடூர இளைஞன். அதே நேரத்தில் ஒரு பெண்ணுக்கு காதல் பைத்தியம் முற்றி, பார்ப்பவரை எல்லாம் காதலித்து திருமணம் செய்ய நினைத்தால் என்ன மாதிரியான விபரீதங்கள் நிகழும் என்பதற்கு சாட்சியாகி இருக்கின்றது இந்த கொலை சம்பவம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments