ஊரடங்கின் 4ஆம் கட்டத்தில், எதற்கெல்லாம் அனுமதி?

0 379861

ஊரடங்கின் 4ஆம் கட்டத்தில், பேருந்துகள், விமான சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதோடு, ஆட்டோ, டாக்சிகளும் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் 18ஆம் தேதி தொடங்கும், ஊரடங்கின் 4ஆம் கட்டம் முற்றிலும் வேறுபட்ட வடிவில் இருக்கும் என பிரதமர் கூறியிருந்தார்.

மாநிலங்களை பொறுத்தவரை, கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா, ஊரடங்கை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தையோ அலுவலங்கள் திறப்பையோ அனுமதிக்க அம்மாநிலம் தயாராக இல்லை. எனவே மகாராஷ்டிராவில் ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் மட்டும் சில தொழிற்சாலைகள் அனுமதிக்கப்படலாம்.

இரண்டாவது இடத்தில் உள்ள குஜராத்தை பொறுத்தவரை, முக்கிய நகரங்களில் தொழில் மையங்களில் பொருளாதார செயல்பாடுகளை தொடங்க அம்மாநில அரசு விரும்புகிறது. அங்கு, கொரோனா பாதித்தோரில் 70 சதவீதம் பேர் அகமதாபாத், சூரத், வதோதராவில் உள்ளனர். எனவே பாதிப்பில்லாத மாவட்டங்களில் சில தளர்வுகள் அளிக்கப்படலாம்.

குஜராத் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களும் பல்வேறு துறைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளன.இதில், கேரளா மெட்ரோ, உள்ளூர் ரயில்கள், உள்நாட்டு விமானங்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலாத் துறையை புதுப்பிக்க திட்டமிடுகிறது.

அதேசமயம், புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்புவதால், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்கள் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க விரும்புகின்றன.

சிவப்பு மண்டலங்களில் எவ்வித செயல்பாடுகளும் அனுமதிக்கப்படாது என்றாலும், பிற பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டும் என்பது மாநிலங்களின் விருப்பம்.

இந்நிலையில், ஊரடங்கின் 4ஆம் கட்டத்தில் பாதிப்பில்லாத பகுதிகளில் இயல்புநிலை திரும்பச் செய்வதற்கான நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கு தளர்வு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பாக, மாநில அரசுகள் வழங்கும் திட்டம், அது கள நிலவரத்தோடு எந்த அளவிற்கு ஒத்துப்போகிறது என்பதை தரவுகளின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகத்தால் இந்த நடவடிக்கைகள் முடிவு செய்யப்படும். அந்த வகையில், மாநில வாரியாக எவ்வளவு பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, எவ்வளவு பேர் தனிமை நிலையில் கண்காணிப்பில் உள்ளனர் என்ற விவரங்களில் உள்துறை அமைச்சகம் கவனம் செலுத்துகிறது.

சுமார் 12 லட்சம் பேர் கண்காணிப்பில் உள்ள நிலையில், இதில் ஒரு பகுதியினருக்கு பாசிட்டிவ் என்று வந்தாலே பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து விடும் என்பதால், அதற்கேற்ப நடவடிக்கைகள் இருக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மிக முக்கியமாக, மாநிலங்களின் கோரிக்கையான, சிவப்பு மண்டலங்களை வரையறுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்கப்படலாம். ஊரடங்கு தளர்த்தப்படும் பகுதிகளில் பேருந்து மற்றும் உள்நாட்டு விமான சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.

கொரோனா பாதிப்பில்லாத பகுதிகளில் உள்ளூர் பேருந்துகள் குறைவான பயணிகளுடன் இயங்கத் தொடங்கும். கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து பிற பகுதிகளில், நிபந்தனைகளுடன் ஆட்டோ டாக்சிகளும் இயக்க அனுமதிக்கப்படலாம், அனுமதி பாஸ் பெற்றவர்கள் மட்டும் மாநிலங்களுக்கு இடையே சென்றுவர அனுமதிக்கப்படலாம். அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி, அனைத்து வகையான பொருட்களையும் ஹோம் டெலிவரி செய்ய அனுமதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments