நடு ரோட்டில் சேர் போட்டு ஒஸ்தி போலீஸ் டியூட்டி..! ஊரடங்கு வேதனைகள்

0 10701

ஊரடங்கை மீறும் வாகன ஓட்டிகளை அவமானப்படுத்துவது போல தண்டனை கொடுக்க கூடாது என்று டி.ஜி.பி அறிவுறுத்திய நிலையில், நடுசாலையில் சேர்போட்டு அமர்ந்து ஊரடங்கை மீறும் வாகனங்களை கண்காணித்து வருகிறார் காவல் ஆய்வாளர் ஒருவர்.

கொரோனாவுக்கான ஊரடங்கு என்பதை மறந்து கும்பலாக சுற்றும் ஒஸ்தி போலீஸ் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

நடந்தால் இரண்டடி , இருந்தால் நான்கடி... என்று செய்யாறு - ஆர்க்காடு பைப்பாஸ் சாலையின் நடுப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்த போலீஸ் வாகனத்திற்கு பின்புறம் ரிலாக்சாக வலம் வரும் இவர்கள் செய்யாறு போலீசார்..!

ஊரடங்கை மீறி இரு பக்கமும் வாகனங்கள் மின்னல் வேகத்தில் கடந்து சென்று கொண்டிருக்க, பைபாஸ் சாலையின் நடுவே ரிப்ளக்டர் கொண்ட பேரிகார்டுகள் ஏதும் இன்றி, தமிழ் சினிமாவில் வரும் ஒஸ்தி போலீஸ் போல செல்போனும் கையுமாக நடு சாலையில் கெத்தாக வீற்றிருந்தார் செய்யாறு காவல் ஆய்வாளர் ராஜாராம்..!

ஊரடங்கை மீறும் வாகன ஓட்டிகளை காவல்துறையினர் அவமானப்படுத்துவது போல தண்டனை வழங்க கூடாது என்று டி.ஜி.பி அறிவுறுத்திய நிலையில் வாகன ஓட்டிகளை கண்டு கொள்ளாமல் விட்டனர். போலீசார் ஹாயாக நடுசாலையில் அமர்ந்து, செண்டர் மீடியன் போல தங்கள் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தனர்.

சாலையின் இரு புறமும் நொடிக்கு ஒரு வாகனம் வேகமாக சென்று கொண்டிருக்க எந்த ஒரு வாகனத்தையும் பெயருக்கு கூட காவல்துறையினர் மறித்து விசாரிக்கவில்லை. நடு சாலையில் அமர்ந்து செல்போன் கண்காணிப்பு பணியில் தீவிரம் காட்டினார் காவல் ஆய்வாளர் ராஜாராம்..! பைபாஸ் சாலையில் அசுர வேகத்தில் சில வாகனங்கள் வருவதால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது

கொரோனா பரவலை தடுக்க அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும் நேரக்கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுவிட்ட நிலையில் செய்யாறு பகுதிகளில் மாலை நேரம் ஆனால் திறந்து விட்டது போல சிலர் வாகனங்களை எடுத்துக் கொண்டு சுதந்திரமாக சுற்றிவருகின்றனர். இவர்களை கண்காணித்து எச்சரிக்க வேண்டிய காவல்துறையினர், செல்போனை கண்காணித்து வருவது தான் வேதனை

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பார்த்தால் தமிழகம் கொரோனாவின் 3 ஆம் கட்டமான சமூக தொற்றின் ஆரம்ப நிலையை தொட்டுவிடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. ஊரடங்கை மதிக்காமல் கண்டிக்க ஆளில்லை என்று வீதியில் சுற்றினால் வீணாக, கொரோனா பிடியில் சிக்க நேரிடும் என்பதை உணர்ந்தாவது வீட்டிலிருப்போம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments