வார்னிஷில் எலுமிச்சை ஜூஸ்.. போதைக்காக விபரீதம்- 3 பேர் உயிரிழப்பு..!

0 6179

செங்கல்பட்டு அருகே போதைக்காக வார்னிஷில் எலுமிச்சை ஜூசை கலந்து குடித்த 3 பேர் அடுத்தடுத்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போதையின் வழி மரணம் என்பதற்கு சாட்சியான விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு....

செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியை சேர்ந்த ரெயில்வே குடியிருப்பில் வசித்து வரும் சிவசங்கரன், பிரதீப், சிவக்குமார் ஆகியோர் கூட்டாளிகள் என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சனிக்கிழமை ரெயில்வே கேட்கீப்பர்களான சிவசங்கரன், பிரதீப் ஆகியோர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இருவரும் வயிற்று வலிக்கு பலியானதாக கூறப்பட்டது.

ரெயில்வே ஊழியரின் மகனும், பலியான இருவரது நண்பருமான கால்டாக்சி ஓட்டுனர் சிவராமன் என்பவர் ஞாயிற்றுக் கிழமை வயிற்றுவலி என அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்குள்ள மருத்துவர்களிடம் தானும், நண்பர்கள் சிவசங்கரன், பிரதீப் ஆகிய 3 பேரும் சேர்ந்து வார்னிஷில் எலுமிச்சை சேர்த்து சாப்பிட்டு போதை ஏற்றிக் கொண்டதாகவும், அதில் வயிற்றில் தீராத வலி ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்குள், சிவகுமார் பரிதாபமாக பலியானதாக கூறப்படுகின்றது.

குடிகுடியை கெடுக்கும் என்பதை மறந்து, மதுக்கடை மூடப்பட்ட நிலையிலும் எதை குடித்தால் போதை ஏறும் என்று சிலர் அலைகின்றனர்.

அத்தகைய நபர்கள் கள்ளசாராயத்தை தேடியும், இதுபோன்ற விபரீத போதை வஸ்துக்களை தாங்களாகவே தயாரித்தும் போதையேற்றுவதாக நினைத்து , அநியாயமாக உயிரை மாய்த்துக் கொள்வதாக காவல் துறையினர் வேதனை தெரிவித்தனர்.

அதே நேரத்தில் குடியை மறக்க இயலாமல் தவிக்கும் குடிமகன்களை இன்னும் 8 நாளைக்கு உறவினர்கள் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் வார்னிஷில் லெமன் கலந்து வேகமாக எமன்கிட்ட போயிடப்போறாங்க என்று எச்சரிக்கின்றது காவல்துறை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments