கும்பலாக சோற்றில் பாத்திகட்டிய மீன்பாய்ஸ்..! முகநூலால் போலீசில் சிக்கினர்

0 26309

தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே ஊரடங்கை மீறி குளத்தில் மீன் பிடித்து, கூட்டாக சமைத்து இலைபோட்டு சோற்றுக்குள் பாத்திகட்டிய 15 பேர் கும்பலை பிடித்த போலீசார், 100 தோப்புக்கரணம் போடவைத்ததோடு 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

முகநூலில் போட்டோ போட்டு சிக்கிய சின்னத் தம்பிகளின் பக்குவமில்லாத சமையல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு....

கொரோனாவின் விபரீதத்தை உணராமல், ஊரடங்கை மீறி தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அடுத்த சால்னாயக்கன் பட்டி குளத்தில் கும்பலாக குளித்து வெயிலோடு விளையாடிக் கொண்டிருக்கும் இந்த கும்பல் போல குறும்புக்கார பசங்க இங்கு அதிகம்..!

இவர்கள் கூட்டாக சேர்ந்து குளிப்பது மட்டும் அல்ல தூண்டில் போட்டு மீன் பிடிப்பது தொடங்கி, அதனை வறுத்தும், சமைத்தும் சாப்பிடும் வரை அனைத்தும் கூட்டாக சேர்ந்து தான் செய்வது வழக்கம்..!

முதல் நாள் போலீசுக்கு போக்குக் காட்டி தப்பித்த இந்த சுள்ளான்கள் குழுவினர் தனித் தனியாக, முக நூலில் தங்களது திருவிளையாடல்களை போட்டோக்களாக வெளியிட்டு போலீசிடம் கையும் களவுமாக சிக்கியுள்ளனர்

முக நூல் படத்தை கொண்டு அடையாளம் காணப்பட்ட இந்த சின்னதம்பிகளையும், அவர்களுடன் ஓசி சாப்பாட்டுக்காக சுற்றி திரிந்த 4 வேலையில்லா ஊர் சுற்றிகளையும் வளைத்துப்பிடித்த போலீசார், மீன் சாப்பிட்ட அந்த கும்பலுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துக் விதமாக 100 முறை தோப்புக்கரணம் போட செய்தனர்

அப்போது போலீசாரை குழப்புவதற்காக ஒருவர் மாற்றி ஒருவர் வேகமாகவும் மெதுவாகவும் தோப்புக்கரணம் போட்டதால் திரும்ப திரும்ப முதலில் இருந்து தோப்புக்கரணம் போடவேண்டிய நிலை ஏற்பட்டது.

பெரும்பாலான சின்னதம்பிகள் அனைவரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பதால் எதிர்காலம் கருதி அவர்களின் பெற்றோரை வரவழைத்து எச்சரித்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். அந்த கும்பலுடன் ஓசி சாப்பாட்டுக்கு சென்ற 4 பேர் மீது மட்டும் ஊரடங்கை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வீட்டுக்குள் இருக்காமல் இது போல கும்பலாக சுற்றினால் கொரோனா தாக்குகிறதோ இல்லையோ, வழக்கு வாய்தா என நீதிமன்றத்துக்கும் வீட்டுக்கும் அலையும் நிலை ஏற்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments