கோடைக்காலத்தில் கொரோனா ஓடிவிடும் என கூறப்படுவது உண்மையா?

0 22842

காற்றில் ஈரப்பதம் அதிகரிப்பது கொரோனா வைரஸ் நோய் பரவும் வேகத்தை குறைக்கலாம் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. எனவே வரும் பருவமழைக்காலத்தில் வைரஸ் பரவும் வேகம் குறையக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மார்ச் 22ஆம் தேதி வரையிலான கொரோனா பாதிப்பு புள்ளிவிவரங்களை அமெரிக்காவின் எம்ஐடி ஆய்வாளர்கள் 2 பேர் ஆய்வு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலையும் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் ஆகிய இரண்டையும் தொடர்புபடுத்தும் இந்த ஆய்வு முடிவின்படி, வெப்பநிலைக்கும், கொரோனா பரவுவதற்கும் இடையிலான தொடர்பு பலவீனமானதாகவே உள்ளது.

வெதுவெதுப்பான அமெரிக்க மாநிலங்களான ஃபுளோரிடா, லூசியானா, வெப்ப நாடுகளான பிரேசில், இந்தியா, மலேசியா ஆகியவற்றில் இருந்து புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே, வெப்பநிலை சாராத, காற்றின் ஈரப்பத அளவே முக்கியமான காரணியாக இருக்கலாம் என்றும், இது செய்முறை ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆய்வாளர்களில் ஒருவரான யூசுப் ஜமால் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் சீனாவிலும், ஸ்பெயின், போர்ச்சுகல், ஃபின்லாந்து ஆய்வாளர்கள் கூட்டாகவும் மேற்கொண்ட இரு ஆய்வுகளில், குளிர்ந்த மற்றும் உலர்ந்த பருவநிலை வைரஸ் பரவுவதற்கு உகந்ததாக இருப்பதாகவும், இதற்கு மாறான பருவநிலை வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

2003ஆம் ஆண்டில் சார்ஸ் நோயை பரப்பிய கொரோனா வைரஸ், வெப்பநிலை அதிகரிக்கும்போது தாக்குப்பிடிக்க முடியாமல் போனதும் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால் எம்ஐடி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், வெப்பநிலை மட்டும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தி விட முடியாது என்றும், ஈரப்பதமும் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் தெரியவந்துள்ளது.

தற்போதுள்ள புள்ளி விவரங்களின்படி பார்க்கும்போது, வெப்ப மண்டல நாடுகளில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு காரணம், வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழலே ஆகும். இதுபோன்ற சூழலில் வைரஸ் பரவும் வேகம் குறையும் என்பதே தங்களது கருத்து என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், வரும் பருவமழைக் காலத்தில் வைரஸ் பரவும் வேகம் ஓரளவு குறையும். எனினும், இதை மட்டுமே அரசு சார்ந்திருக்கக் கூடாது. வைரஸ் பரவும் வேகம் தானாகக் குறையாது என்ற அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆய்வாளர்களில் ஒருவரான யூசுப் ஜமீல் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments