கொரோனா: அதிர்ச்சியில் உறைந்த அகிலம்
உலகம் முழுவதும் கொரோனா தொற்று நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், அந்த அச்சுறுத்தலால் 300 கோடிக்கும் அதிகமானோர் வீடுகளிலேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து 182 நாடுகளில் பரவியுள்ள கொரோனா, ஐரோப்பிய நாடுகளை தற்போது கதிகலங்கச் செய்து வருகிறது. சீனாவில் இதுவரை 3 ஆயிரத்து 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், அதை இத்தாலியும், ஸ்பெயினும் விஞ்சியுள்ளன. இத்தாலியில் 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோரும், ஸ்பெயினில் 3 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோரும் கொரோனாவுக்கு தங்களது உயிர்களை இழந்துள்ளனர். இதற்கடுத்து அதிகபட்சமாக ஈரானில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். குறிப்பாக, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் ஒரேநாளில் சுமார் ஆயிரத்து 500 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சமையல் கலை நிபுணரான பிளாயிட் கார்டோஸ் ((Floyd Cardoz)) கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், நியூஜெர்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். ஹங்கர் இன்க் ஹாஸ்பிடலிடி நிறுவன இணை நிறுவனரான அவருக்கு, மும்பையிலும் 2 நட்சத்திர விடுதிகள் உள்ளன.
இதேபோல், கொரோனாவுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இன்று மேலும் 450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையும் சேர்த்து, உலகில் மொத்தமாக பாதித்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 71 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அவர்களில் 1 லட்சத்து 14 ஆயிரம் பேர் குணமாகி திரும்பியுள்ளனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உலகின் பலநாடுகளிலும் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீடுகளில் முடங்கி கிடக்கும் நிலை நேரிட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (Antonio Guterres) உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து நடவடிக்கை எடுத்தால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா காரணமாக வேலையில்லாமல் இருக்கும் நபர்களுக்கும், மூடப்பட்ட ஆலைகளுக்கும் உதவும் வகையில், இந்திய மதிப்பில் சுமார் 150 லட்சம் கோடி ரூபாயை ( 2 ட்ரில்லியன் டாலர்) ஒதுக்கீடு செய்ய வழிவகுக்கும் மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. செனட் அவையில் நடந்த வாக்கெடுப்பில் 96 வாக்குகளுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.
Comments