ஊரடங்கை பொருட்படுத்தாமல் ஊர்சுற்றும் இளசுகள்

0 3819

சென்னையில் ஊரடங்கிற்கு கட்டுப்படாமல், கொரோனா குறித்த விழிப்புணர்வு இன்றி வீதிகளிலும், வாகனங்களிலும் கும்பலாக சுற்றி திரியும் நபர்களால் கொரோனா வேகமாக பரவும் விபரீதம் ஏற்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா நோய்த்தொற்றினால் ஏற்படும் கொடூர உயிரிழப்புகளைப் போல நம்நாட்டில் நிகழ்ந்துவிடக்கூடாது எனவும் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காகவுமே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது
ஆனால் ஊரடங்கை சற்றும் பொருட்படுத்தாமல் சென்னையின் பல இடங்களில் கொரோனா சூப்பர் ஸ்பிரட்டர்கள் சர்வசாதாரணமாக உலா வருகின்றனர்.

அண்ணாசாலையில் உள்ள மெட்ராஸ் காபி ஹவுஸ் மவுண்ட் ரோடு கடைக் கதவை அடைத்துவிட்டு வாசலிலேயெ வைத்து டீ, காபி , பிரெட் பட்டர்ஜாம், பிஸ்கட் போன்ற தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டன. கூட்டம் கூடக்கூடாது என்ற அறிவுறுத்தல்களை தூக்கி எறிந்துவிட்டு கூடி நின்று தேநீர் அருந்திக் கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும் மாலைப்பொழுதை பலர் கழித்தனர். கடை விற்பனையாளரும் இந்த கூட்டத்தை குறித்து கவலைக்கொள்ளாமல் ஜோராக வியாபாரம் பார்த்து கல்லா கட்டினார்.

அத்துடன், அங்கு வந்த போக்குவரத்து காவலரும் கூடியிருந்தவர்களை கலைந்துச்செல்ல அறிவுறுத்தாமல் கூட்டத்தோடு கூட்டமாக நின்று பார்சல் பெற்று சென்றதை காணமுடிந்தது.

தொடர்ச்சியாக, லோடு ஏற்றும் டாடா ஏஸ் வாகனத்தில் சுமார் 15 பெண்களை ஏற்றி பவனி வந்த ஓட்டுநரை அண்ணா சாலையில் காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். மஞ்சள் நீராட்டு விழாவிற்கு செல்வதாக பொறுப்பே இல்லாமல் கூற, வேறுவழியில்லாமல் அவர்களை எச்சரித்து அனுப்பும் நிலை காவல்துறையினருக்கு ஏற்பட்டது

அடையாறில், மாலை நேரத்துடன் கொரோனா மறைந்துவிட்டதை போல சாலையில் வாகனங்கள் வரிசைகட்டி நிற்கிறது. போலீசாரும் செய்வதறியாது திகைத்துபோய் வேறு வழியின்றி வாகனங்களை அனுப்பி வைத்தனர்.பட்டினப்பாக்கம் பகுதியிலோ கொரோனா வேறு ஏதோ கிரகத்தில் பதுங்கி இருப்பது போல மெத்தனமாக இருசக்கர வாகனத்திலும், சாலையிலும் சுற்றித் திரிந்தனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க தனித்திருத்தலும் பொதுஇடங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்ப்பதும் முக்கிய தீர்வாக அரசு எவ்வளவோ எடுத்துக்கூறியும் பலர் அதை பொருட்படுத்தாமல் சுற்றித்திரிவது அபாயத்தை அதிகரிக்கும் செயல் என எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்,  அரசின் உத்தரவுக்கும் வீட்டிற்கும் அடங்காமல் இதுபோல சுற்றித்திரிபவர்களை வசமாக கவனித்தால் மட்டுமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments