தமிழகத்தில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருகிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 16808

கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருவதாகத் தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராமல்,  அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

சட்டப்பேரவையில் கொரோனா நிலவரம் குறித்து தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், உலக அளவில் 186 நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்றார். இதுவரையில் உலக அளவில் 3 லட்சத்து 32,970 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்றும், 14, 510 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொரானா தமிழகத்தில் சமூக தொற்றாக மாறிவிட கூடாது என்பதற்காகவே மக்களை இல்லங்களிலேயே இருக்க அரசு வலியுறுத்துகிறது என்றும், அதற்காகவே 144 உத்தரவு போடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

டெல்லியில் இருந்து வந்து, கொரோனா தொற்று உறுதியான இளைஞருடன் தொடர்பில் இருந்த 193 பேரை கண்காணித்து வருவதாகவும், மிகவும் சவாலான பணியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வருவதாகக் கூறிய சுகாதாரத்துறை அமைச்சர், மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், வீட்டிலேயே இருக்க வேண்டும், வெளியே செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

உலகையே அச்சுறுத்தும் நோயை எதிர்கொள்ள அரசு தயாரிப்புகளுக்கு பொது மக்கள் தயவுகூர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மக்கள் வெளியில் வரவேண்டாம், மக்களுக்கு தேவையானதை செய்ய அரசு தயாராக உள்ளது, அரசு எதிர்பார்ப்பதெல்லாம் பொதுமக்களின் ஒத்துழைப்பை மட்டுமே என விஜயபாஸ்கர் குறிப்பிட்டார்.

நோய் வேகமாக பரவி வருகிறது, சமூக தொற்றாக மாறாமல் இருக்க அரசின் உத்தரவை மக்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார்.

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் 300 படுக்கைகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments