நாளை மறுநாள் கடைகள், உணவகங்கள் மூடல்

0 6707

தமிழகத்தில் வரும் 22ம் தேதி கடைகள் மூடப்படும் என  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. இதேபோல் உணவகங்களும் மூடப்படும் என்று தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த வரும் 22ம் தேதி, வீடுகளை விட்டு வெளியே வராமல் மக்கள் சுய ஊரடங்கில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.  இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

சென்னை அசோக்நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அதன் மாநில தலைவர் விக்கிரமராஜா, 22ஆம் தேதி காலை 7மணி முதல் இரவு 9மணி வரை அனைத்துக் கடைகளும், நிறுவனங்களும் மூடப்படும் என்றார்.

தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்க தலைவர் மு. வெங்கடசுப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, 22ம் தேதி தமிழகத்தில் உணவகங்கள் அனைத்தும் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டோரின் சேவைகளை பாராட்டும் வகையில், உணவக உரிமையாளர்களும், ஊழியர்களும் 22ம் தேதி மாலை 5 மணிக்கு தமது பகுதிகளில் வாயிலில் நின்று கைகளை தட்டி ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் அறிவிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேபோல, வரும் 22ம் தேதி காலை 7 மணிக்கு பிறகு பால் விநியோகம் நடைபெறாது என்று தமிழ்நாடு பால்முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி  தெரிவித்தார்.

அதற்குப் பதிலாக, 21ம் தேதியன்று கூடுதல் நேரமும், 22ம் தேதி அதிகாலை 3 மணி முதல் 6.30 மணி வரையிலும் பால் விநியோகம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments