கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள்..!

0 491

சென்னை பாரிமுனையில், மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் கடைகளில் முகமூடி, சானிடைசர் போன்றவற்றை கூடுதல் விலைக்கு விற்று வருவது அம்பலமாகியுள்ளது. கொரோனாவால் பொதுமக்களிடையே நிலவும் அச்சத்தைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னையின் முக்கிய வணிக பகுதியான தியாகராய நகரில் பெரு வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு இருப்பதால் அப்பகுதியே வெறிச்சோடி காணப்படுகிறது.

ஆனாலும், மருந்து, பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு எந்தவித உத்தரவையும் அரசு இதுவரை பிறப்பிக்கவில்லை.

சென்னை பாரிமுனை என்.எஸ்.சி போஸ் சாலையில் முக கவசம், சானிடைசர்களை விற்பனை செய்யும் நூற்றுக்கும் மேற்பட்ட மொத்த வியாபாரக் கடைகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது.

தற்போதைய சூழல் காரணமாக சில்லரை வியாபாரிகளுக்கு பொருட்கள் சென்றடைவதில் தாமதமாவதால், ஏராளமான வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் இங்குள்ள கடைகளில் பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால் பாரிமுனை பகுதியில் வழக்கத்தைவிட அதிக மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

இதனிடையே, ஒரு சில கடைகளில் முக கவசம், சானிடைசர்கள் ஸ்டாக் இல்லை எனக்கூறி பொதுமக்களை திருப்பி அனுப்புகின்றனர்.

 சில கடைகளில் பொதுமக்களின் அச்சத்தை பயன்படுத்தி, 5 முதல் 10 ரூபாய் வரையில் விற்று வந்த முக கவசத்தின் விலையை பன்மடங்கு உயர்த்தி 35 ரூபாய் வரையிலும், உயர்தர முக கவசம் 280 ரூபாய் வரையிலும் விற்று வருகின்றனர்.

மேலும், 100 ரூபாய்க்கு விற்று வந்த 100 மில்லி சானிடைசர்களின் விலையை 200 முதல் 300 ரூபாய் வரையிலும் அநியாய விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

கொரோனாவால் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள கலக்கத்தைப் பயன்படுத்தி மனிதாபிமானம் இல்லாமல் அத்தியாவசியப் பொருட்கள் மூலம் பணம் பார்க்க முயலும், வியாபாரிகளை அடையாளம் கண்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments