நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரின் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்..!

0 9959

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று அதிகாலை தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

டெல்லியில் 2012ம் ஆண்டு காதலனுடன் சென்ற இளம்பெண்ணை ஓடும் பேருந்தில் வைத்து வன்கொடுமை செய்யப்பட்டார். பின்னர் இரும்புத் தடியால் அடித்து பேருந்திலிருந்து வீசியெறியப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரில் ராம் சிங் என்பவர் சிறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டான்.

மற்ற 4 நான்கு பேரையும் தூக்கிலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. கடைசிகட்டமாக இன்று அதிகாலை மேல்முறையீடு செய்யப்பட்டபோது உச்சநீதிமன்றம் அதனை ஏற்க மறுத்துவிட்டது.

இதனையடுத்து இன்று காலை திகார் சிறையில் குற்றவாளிகள் முகேஷ் சிங், அக்சய் குமார், பவன் குப்தா, வினய் சர்மா ஆகிய நான்கு பேருக்கும் தூக்கு தண்டனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நான்கு பேரின் உடல் நலம் சோதிக்கப்பட்டு தூக்கில் இடுவதற்கான நிலையில் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் சான்று அளித்தனர். தூக்குப் போடும் நபரான பவன் வந்து சேர அதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட்டும் சிறைக்கு வந்தார்.

அதனைத் தொடர்ந்து சரியாக 5.30 மணிக்கு 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அரை மணி நேரம் கழித்து உடல்கள் இறக்கி விடப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கொடிய குற்றவாளிகள் நால்வரும் உயிரிழந்த செய்தி கேட்டு வெளியே திரண்டிருந்த பொதுமக்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். குற்றச்செயல் நடைபெற்ற 7 ஆண்டுகள் கடந்த நிலையில் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் பெண்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதே மிக முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, அனைத்து துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்குவதாகவும், பெண்கள் மேம்பாட்டை நோக்கிய மற்றும் பெண்களுக்கான சமத்துவம் மற்றும் சமவாய்ப்பை வழங்கும் தேசத்தை நாம் அனைவரும் இணைந்து கட்டமைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments