மேலும் ஒருவருக்கு கொரோனா... சென்னையில் அனுமதி..!

0 10170

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், மேலும் ஒருவர் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம், தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த 20 வயது இளைஞர், சிகையலங்கார நிபுணராக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர்களது அழைப்பின் பேரில், தலைநகர் டெல்லிக்கு, இம்மாதம் முதல் வாரத்தில், வேலைதேடி சென்றுள்ளார்.

ஆனால், அங்கு வேலை சரியாக அமையாத சூழலால், டெல்லியிலிருந்து ரயிலில் புறப்பட்டு, கடந்த 12ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேர்ந்துள்ளார். பின்னர், சென்னையில் நண்பர்களுடன், அந்த இளைஞர் தங்கியதாக சொல்லப்படுகிறது.

அடுத்தடுத்த நாட்களில் காய்ச்சல், சளி தொந்தரவு அதிகமானதால், கடந்த 16ஆம் தேதி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டதால், அவரது ரத்த மாதிரிகள், சளி உள்ளிட்டவற்றின் நீர்த்திவலைகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டன.

அதன் முடிவில், அந்த 20 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனை, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கரும் உறுதிபடுத்தி, டுவிட்டரிலும், சென்னை எழும்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பிலும், அறிவித்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 20 வயது ஆம்பூர் இளைஞர், டெல்லியிலிருந்து, கடந்த 12ஆம் தேதி, வியாழக்கிழமை இரவு 8.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த, ராஜ்தானி எக்ஸ்பிரசில் வந்திருப்பது, தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞர் சந்தித்த நண்பர்கள், அவரோடு தங்கியிருந்த நண்பர்கள் ஆகியோரது விவரங்களை சேகரித்து, அவர்களை மருத்துவக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கைகளை, தமிழ்நாடு அரசின் பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments