கொரோனாவுக்கு அஞ்சி தாயகம் திரும்பிய “கோப்ரா”..! படபிடிப்புகள் அனைத்தும் ரத்து

0 4017

உலகையே நடுங்க வைத்திருக்கும் கொரோனாவின் கோரப்பிடிக்கு பயந்து கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படக்குழுவினர் வெளி நாடுகளில் படப்பிடிப்பை கைவிட்டு தாயகம் திரும்பியுள்ள நிலையில் தமிழகத்தில் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகள் வருகிற 19ந்தேதி முதல் நிறுத்தப்படுவதாக ஆர்.கே செல்வமணி அறிவித்துள்ளார். 

கொரோனாவின் கோரப்பிடி நாளுக்கு நாள் உலகின் பல நாடுகளையும் பதற வைத்துக் கொண்டு இருக்கின்றது. சென்னையில் பெரும்பாலான மால்கல்கள் மற்றும் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைந்துள்ளது. சில திரையரங்குகளில் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஒரு பாட்டு என்றாலும் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தினால் தான் பிரமாண்டம் தெரியும் என்று வெளிநாட்டிற்கு பெட்டிய கட்டும் நம்ம ஊரு சினிமா படபிடிப்பு குழுவினர் வெளிநாட்டு பயணத்தை முழுவதுமாக தவிர்த்து வருகின்றனர். அந்தவகையில் சீனா செல்ல திட்டமிட்டிருந்த இந்தியன் 2 குழுவினரோ தங்கள் படப்பிடிப்பு இந்தியாவிலாவது நடக்குமா ? என்ற நிலையில் உள்ளனர்.

பொன்னியின் செல்வனுக்கு தாய்லாந்து சென்ற மணிரத்னம் அண்ட் கோ, அங்கிருந்து தாயகம் திரும்பி படத்தை எங்கு படமாக்குவது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். லண்டனில் துப்பறிய புறப்பட்ட விஷால் மிஷ்கின் குழாயடி சண்டை போட்டுக் கொண்டு ஒருவர் பின் ஒருவராக ஊருக்கு திரும்பி விட்டனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக 5 மாறுபட்ட வேடத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் ரஷ்யாவில் நடந்து வந்தது. கொரோனாவின் தாக்குதலுக்கு அஞ்சி கோப்ரா குழுவினரும் படப்பிடிப்பை பாதியில் கைவிட்டு தாயகம் திரும்பி உள்ளனர்.

வழக்கமாக சென்னையில் கோகுலம் ஸ்டுடியோ, ஈவிபி பிலிம் சிட்டி. ஆந்திராவில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வந்த படங்கள் கூட கொரோனா பீதியில் குறிப்பிட்ட நபர்களை வைத்து படப்பிடிப்பு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே திரையரங்குகளுக்கு கூட்டம் வராத காரணத்தால் ஒரு சில வாரங்களில் வெளியாக உள்ள விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரை போற்று ஆகிய படங்களின் வெளியீடு தள்ளிவைக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார், கொரோனா வைரஸ் அச்சம் நீங்கும் வரை படப்பிடிப்புகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

அதனை தொடர்ந்து பெப்சி சார்பில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே செல்வமணி வருகிற 19 ந்தேதி முதல் சீரியல் மற்றும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

ஏற்கனவே வினியோகஸ்தர்கள் சங்கத்தினர், திரையரங்குகள் ஸ்டிரைக்கிற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் கொரோனா அச்சம் திரை உலகினரையும் உலுக்கி வருகின்றது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments