சென்னையில் கொரோனா..! மேட் இன் சீனா..!

0 80312

சென்னையில் சிகிச்சை பெற்று வரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த கொரோனா நோயாளியின் குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 80 சதவீதம் தொடுதல் மூலம் கொரானா பரவுவதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு கொரானா வந்த வழி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...  

ஓமன் நாட்டிற்கு கட்டுமான வேலைக்கு சென்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த 45 வயது தொழிலாளி ஒருவர் மஸ்கட்டில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் 28ந்தேதி சென்னை வந்துள்ளார்.

மஸ்கட் விமானம் சென்னை வந்து இறங்கியதும் விமான நிலையத்தில் கட்டுமான தொழிலாளிக்கு தீவிர உடல் வெப்ப மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட மருத்துவ குழுவினர் காஞ்சிபுரத்தில் உள்ள அவரது கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அடுத்த இரு தினங்கள் கழித்து கடுமையான காய்ச்சலுடன், சளி இருமல் என கடுமையாக வாட்டியதால் அவதிக்குள்ளான அவர், மாநில சுகாதாரத்துறையின் அவசர உதவி கட்டுப்பாட்டு எண்ணுக்கு தொடர்பு கொண்டு தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து தெரிவித்துள்ளார்.

2ந்தேதி அவரை காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவபரிசோதனை நடத்தி ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக கிண்டி கிங் இஸ்டியூட் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

48 மணி நேரம் கடந்த நிலையில் அவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதியானது. இதற்கிடையே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கொரானா வார்ட்டில் கிருமிகளை அழிக்கும் வகையில் சுத்தம் செய்வதற்காக, கொரானா பாதிப்புக்குள்ளான தொழிலாளியை அங்கிருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைபடுத்தப்பட்ட வார்டுக்கு மாற்றியுள்ளனர்.

வார்டு சுத்தப்படுத்தப்பட்ட பின்னர் 5 தேதி மீண்டும் அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைபடுத்தப்பட்ட வார்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். அவருக்கு அச்சத்தை போக்கும் விதமாக அவரது மனைவியையும் அவருடனே பாதுகாப்புடன் தங்குவதற்கு அனுமதித்து உள்ளனர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து அனுப்பபட்ட ஆய்வு முடிவுகள் சரியானது என்றும் தொழிலாளிக்கு, கொரானா வைரஸ் தொற்று இருப்பதை புனேவில் உள்ள ஆய்வுகூடமும் உறுதிபடுத்தியது. அதன்பின்னர் கூட தமிழகத்தில் ஒருவருக்கு கொரான பாதிக்கப்பட்டுள்ளதை அறிவிக்காமல் தமிழக சுகாதாரதுறை ரகசியம் காத்து வந்தது.

இந்த நிலையில் சனிக்கிழமை மாலை மத்திய சுகாதாரதுறை சிறப்பு செயலாளர் சஞ்சீவ் குமார் , ஓமன் நாட்டிற்கு சென்று வந்த தமிழர் ஒருவருக்கும் கொராணா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்ததால் தமிழகத்திற்கு உள்ளேயும் கொரானா வந்து விட்ட தகவல் வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து சுறுசுறுப்பான சுகாதாரதுறையினர், கொரானா ஆரம்ப கட்டத்தில் பரவாது, எனவே அவருடன் மஸ்கட் விமானத்தில் வந்தவர்களுக்கு கொரானா பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளனர், மேலும் ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் இதுவரை ஒருவருக்கு கூட கொரானா பாதிப்பு கண்டறியப்படாத நிலையில் இவருக்கு எப்படி கொரானா தொற்று ஏற்பட்டது ? என்பது தெரியாமல் சுகாதாரதுறையினர் குழப்பத்தில் உள்ளனர். ஒருவேளை விமான நிலையத்தில் உள்ள பார்சல் டிராலிகள் மூலம் கொரானா தொற்று பரவி இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் கொரானா பாதிப்புக்குள்ளனவரின் மகன், மகள், தாய் ஆகிய 3 பேரையும் தனிமைபடுத்தப்பட்ட வார்டில் வைத்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது கிராமத்தை சேர்ந்த அக்கம்பக்கத்து வீட்டில் வசிக்கும் சிலருக்கு இந்த தகவல் தெரியவந்ததால் அவர்கள் வீடுகளை காலி செய்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

கொரானா நோயாளின் பெயர் ஊர் அனைத்தையும் ரகசியமாக வைத்துள்ள சுகாதாரதுறையினர், மருத்துவ குழு ஒன்றை அனுப்பி, ஊரில் தங்கி இருந்த இரண்டு நாட்களில் அவர் சென்று வந்த இடங்கள் குறித்த தகவலை சேகரித்து கொரானா பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ள பொதுசுகாதாரத்துறை இயக்குனர் குழந்தை சாமி, 80 சதவீத கொரானா நோய் தொற்று கைகளால் தான் பரவுகின்றது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

 கடந்த சில வாரங்களாக கொரானா குறித்து பல்வேறு வதந்திகள் பரவிவந்த நிலையில் முதல் முறையாக தமிழ்நாட்டில் கொரானாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பழனி, கொரானா வைரசால் பாதிக்கப்பட்டவர் சந்தித்த 22 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்தார். இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஓமன் நாட்டில் இருந்து சென்னை திரும்பி, கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட 45 வயதான  கட்டுமானத் தொழிலாளிக்கு முதற்கட்ட சோதனை நடத்திய மருத்துவர்கள் 2 பேரை, பணிக்கு வர வேண்டாம் என  ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அவர்கள் இருவரும் வீட்டிலேயே மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே  கொரானா தொற்று உறுதியான கட்டுமான தொழிலாளி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் வைக்கப்பட்டு  தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருடன் அவர் மனைவியும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், இதுவரை 60 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், ஓமன் நாட்டில் இருந்து வந்தவருக்கு மட்டுமே கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். ஐ.பி.எல். போட்டிகளை நடத்த வேண்டாம் என அறிவுறுத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொரானாவால் பாதிக்கப்பட்டவர் பயணித்த விமானத்தின் சக பயணிகள் விவரங்களை பெற்று அவர்களும் கண்காணிக்கப்படுவதாகவும், கொரானா தொற்று உள்ளவர்களின் உறவினர்கள், அருகில் இருந்தோர் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிண்டி கிங்ஸ் இன்ஸ்டியூட் போன்று தேனியிலும் ஒரு சோதனை மையம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பீலா ராஜேஷ் கூறினார். கொரானா அச்சத்தால் அனைவரும் முககவசம் அணிய அவசியம் இல்லை என்றும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சுற்றி உள்ளவர்கள் மட்டும் அணிந்தால் போதும் என்றும் தெரிவித்தார். பொதுவாக பயணங்களை மக்கள் தவிர்க்கலாம் என்றபோதும், அச்சப்படத் தேவையில்லை என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments