டிரம்ப் வருகையையொட்டி விழாக்கோலம் பூண்டுள்ள அகமதாபாத் நகரம்..!

0 609

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது குடும்பத்தினருடன் இன்னும் சில மணி நேரத்தில் இந்தியா வர உள்ளார். அகமதாபாத் வரும் அவர்களை வரவேற்க அந்நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். அதிபர் டிரம்ப்புடன், அவரது மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா, மருமகன் ஜேர்ட் குஷ்னர் ஆகியோரும் வருகின்றனர். டிரம்ப் நிர்வாகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவும் உடன் வருகிறது.

அகமதாபாத் சர்தார் வல்லபபாய் படேல் விமான நிலையத்தை முற்பகல் 11.40 மணிக்கு வந்தடையும் அதிபர் டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கிறார். அங்கு டிரம்ப்புக்கு அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அதிபரும், பிரதமர் மோடியும் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு செல்கின்றனர்.

இதையடுத்து நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடைபெறும் மொடேரா கிரிக்கெட் மைதானத்துக்கு அதிபர் டிரம்ப் சாலை வழியாக செல்கிறார். ஒரு லட்சம் பேர் வரை திரண்டு அவரை வரவேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

image

டிரம்ப் செல்லும் சாலையின் இரு மருங்கிலும் நாட்டின் ‘வேற்றுமையில் ஒற்றுமை’யை குறிக்கும் விதமாக குஜராத் உள்ளிட்ட 28 மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான 28 மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த கலைஞர்கள் பாரம்பரிய இசை மற்றும் நடனத்தின் மூலம் அதிபர் டிரம்ப்பை வரவேற்பார்கள்.

அதிபர் டிரம்ப்-பிரதமர் மோடி கூட்டாக பங்கேற்கும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி நடைபெறும் மொடேரா மைதானத்தில் பாரம்பரிய கலைஞர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அத்துடன், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அந்த மைதானத்தில் அரங்கேறுகிறது. அதைத் தொடர்ந்து சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் சூழ ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் உரையாற்றுகிறார்.

குஜராத் நிகழ்ச்சிகளை மாலைக்குள் நிறைவு செய்யும் அதிபர் டிரம்ப், அங்கிருந்து தனது குடும்பத்தினருடன் ஆக்ரா சென்று தாஜ் மஹாலை பார்வையிடுகிறார். அதையடுத்து டிரம்ப் டெல்லி புறப்படுகிறார்

நாளை காலை அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலானியா ஆகியோருக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கிருந்து அவர்கள் ராஜ்காட்டிலுள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகின்றனர். 

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் தலைமையிலான இருநாட்டு குழுவினர் பங்கேற்கும் பேச்சுவார்த்தை ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறுகிறது. முதலீடுகள், பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி பாதுகாப்பு, மதசுதந்திரம், வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பேச உள்ளனர். அதைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப்புக்கு பிரதமர் மோடி மதிய விருந்து அளிக்கிறார்.

பின்னர் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்கிறார். இரவு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார். அதையடுத்து அவரளிக்கும் விருந்தில் கலந்துகொண்ட பிறகு டிரம்ப், டெல்லியிலிருந்து அமெரிக்கா புறப்படுகிறார்

அதிபர் டிரம்ப்பின் வருகையையொட்டி அகமதாபாத், ஆக்ரா மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments