சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருளாதார வளர்ச்சியே இலக்கு - பிரதமர் மோடி

0 484

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் நாட்டின் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் என குஜராத்தில் வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாட்டை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில், இடம்பெயரும் வன உயிரினங்கள் பாதுகாப்பு மாநாட்டை பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைத்தார். 5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 126 நாடுகளை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் வன உயிரினங்கள் பாதுகாப்பு நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர். அழிந்து வரும் விலங்குகள் மற்றும் பறவைகளை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது.

மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, வனவிலங்குகள் மற்றும் அதன் வாழ்விடங்களைப் பாதுகாப்பது இந்திய கலாசாரத்தின் ஒரு அங்கம் என்றார். தற்போது, இந்தியாவில் கிட்டத்தட்ட 2,970 புலிகள் உள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் இலக்கை இந்தியா அடைந்துள்ளதாக பெருமிதத்துடன் கூறினார்.

நாட்டின் வனப்பரப்பு 21 புள்ளி 67 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டிய மோடி, பாரிஸ் ஒப்பந்த இலக்கின் அடிப்படையில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என தெரிவித்தார். புலம் பெயர்ந்த பறவைகளை பாதுகாக்க தேசிய செயல் திட்டத்தை இந்தியா தயாரித்துள்ளதாக கூறிய பிரதமர், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் நாட்டின் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதை அரசு உறுதி செய்வதாக தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments