போலீசிடம் இருந்து தப்ப குதித்த குருவிக்கு மாவுகட்டு..! 25 அடி உயர தண்ணீர் தொட்டி சாகசம்

0 931

விழுப்புரம் அருகே வியாபாரிகளிடம் கத்தியை காட்டி மாமூல் வசூலித்த குட்டி ரவுடி ஒருவர், போலீசிடம் இருந்து தப்புவதற்காக சினிமா பாணியில் 25 அடி உயர நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குதித்து தனது காலை ஒடித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. மாமூல் கேட்டவருக்கு மாவுக்கட்டு போடப்பட்ட சோகம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

குருவி படத்தில் உயரமான இடத்தில் இருந்து குதித்து நாயகன் வில்லன்களிடம் இருந்து தப்பும் சாகச காட்சியை போன்ற நிஜ சம்பவம் ஒன்று விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே அரங்கேறி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பல கூட்ரோட்டில் கடைவைத்துள்ள வியாபரிகளிடம் மாமூல் கேட்டு கத்தியை காட்டி மிரட்டிய புகாரில் தேடப்பட்டு வந்த குயிலாப்பாளையத்தை சேர்ந்த குட்டி டான் உதயன் என்பவர் தான் சாகசம் செய்ய முயன்று காலை முறித்துக் கொண்டவர்..!

சுரேஷ் என்ற வியாபாரியிடம் ரவுடி உதயன் கத்தியை காட்டி மிரட்டி மாமூல் கேட்ட தாகவும் கொடுக்க மறுத்ததால் ஆவேசம் அடைந்து வெட்ட முயன்றபோது சரக்கு வாகனத்தின் கண்ணாடியை உடைத்ததாகவும் புகார் கூறப்பட்டது.

விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஆரோவில் தனிப்படை போலீசார் தலைமறைவான ரவுடி உதயனை தேடிவந்துள்ளனர். இந்த நிலையில் மாட்டுக்காரன் சாவடி, அம்மா பூங்கா அருகே உள்ள 25 அடி உயர நீர்த்தேக்க தொட்டியின் மேல் ஏறி உதயன் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

நீர்த்தேக்க தொட்டி அருகே அவனது இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததால், ரவுடி உதயனை பிடிக்க காவல்துறையினர் அதிரடியாக நீர்த்தேக்க தொட்டியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு ஏணி வழியாக மேலே ஏறியுள்ளனர்.

போலீஸ் வருவதை உணர்ந்த ரவுடி உதயன் , குருவி சினிமா பாணியில் தப்பிச்செல்லும் திட்டத்துடன் நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கீழே குதித்துள்ளான். குதித்த வேகத்தில் இடது காலை முதலில் தரையில் ஊன்றியதால், காலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் எலும்பு நொறுங்கி , காலில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் ரவுடி உதயனை தாயுள்ளத்தோடு மீட்டு அழைத்துச்சென்று மருத்துவமனையில் சேர்த்து மாவுக்கட்டு போட்டுவிட்டுள்ளனர்..!

ரவுடி உதயனிடம் இருந்து கத்தியும், இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. முன்பெல்லாம் கழிவறையில் வழுக்கி விழுந்து கை, கால்களுக்கு மாவுக்கட்டுபோட்டுக் கொள்ளும், ரவுடிகள் தற்போது தப்பி ஓட நினைத்து தங்கள் கால்களை உடைத்துக் கொள்வதாக போலீசார் வேதனை தெரிவித்தனர்.

அதே நேரத்தில் சினிமாவில் நாயகன் கிராபிக்ஸ் உதவியால் தப்பிய நிலையில் நிஜத்தில் மேலிருந்து தரையில் குதித்ததால் குட்டி ரவுடி உதயனின் இடது காலுக்கு மாவுக்கட்டு போடும் பரிதாபநிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments