கார்த்தி சிதம்பரம் வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கு - வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் பரிந்துரை

0 244

நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தை மறைத்தது தொடர்பான வழக்கில், கார்த்தி சிதம்பரத்தின் மனுவை வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

சென்னை முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தில் 6 கோடியே 38 லட்சம் ரூபாயை கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த வழக்கு, கடந்த ஆண்டு ஜூலை மாதம், எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

அதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு, நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கார்த்தி சிதம்பரம் இயக்குநராக இருந்த அட்வான்டேஜ் ஸ்ட்ரடஜி நிறுவனத்தில் இருந்து கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அந்நிறுவனத்திற்கு முன்பு அனிதா சுமந்த் வழக்கறிஞராக,ஆஜரானதால், வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி அனிதா சுமந்த் பரிந்துரை செய்தார்.

இதனிடையே, வருமான வரித்துறை தொடர்ந்த அதே வழக்கை ரத்து செய்யக் கோரியும், அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கூறியும் கார்த்தி சிதம்பரம் தரப்பில் நீதிபதி ராஜமாணிக்கத்திடம் முறையிடப்பட்டது.

அப்போது வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே வேறு ஒரு நீதிபதிக்கு வழக்கை மாற்ற நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். வழக்கு எண்ணையே தவறாக குறித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கு தொடர்பான விசாரணை விவரங்களை முழுமை மறைத்தது தவறானது என்று கார்த்தி சிதம்பரம் தரப்பிற்கு நீதிபதி ராஜமாணிக்கம் கண்டனம் தெரிவித்தார்.

எம்பி, எம்எல்ஏகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் முறையிட்டிருக்கலாம் என்று கூறிய நீதிபதி,தலைமை நீதிபதி இந்த வழக்கை தான் விசாரிக்க வேண்டும் என்று எந்த நிர்வாக உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் வழக்கை தான் விசாரிப்பது சரியாக இருக்காது என தெரிவித்து, வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments