கேரள பள்ளி மாணவி.. கோவையில் கொடூரக் கொலை..!

0 909

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே தன்னுடனான காதலை முறித்துக் கொண்ட பள்ளி மாணவியை காரில் கடத்திச் சென்று, கோவை மாவட்டம் வால்பாறை அருகே கழுத்தறுத்துக் கொலை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டான்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 17 வயதான கோபிகா என்ற மாணவி 12ஆம் வகுப்பு பயின்று வந்தார். இவரை அதே பகுதியை சேர்ந்த ஜாபர் ஷா என்ற இளைஞர் காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற ஜாபர் ஷாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவருடன் பேசுவதை குறைத்துள்ளார் கோபிகா. காதலியிடம் பேச முடியாமல் தவித்த ஜாபர் ஷா, எர்ணாகுளத்திற்கு திரும்பி வந்து அங்குள்ள தனியார் கார் சர்வீஸ் செண்டரில் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்.

பின்னர் கோபிகாவை நேரில் சந்தித்த ஜாபர் ஷா, உனக்காக வெளிநாட்டு வேலையை உதறிதள்ளி விட்டு வந்துள்ளதாகவும், எனவே தன்னை பழையபடி காதலித்து திருமணம் செய்து கொள்ளும் படி கூறியுள்ளார். அதற்கு கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும் என்றும், திருமணத்தைப் பற்றி பிறகு யோசிக்கலாம் என அழுத்தமாக கூறியுள்ளார் கோபிகா. இதனால் வெறுப்படைந்த ஜாபர் ஷா காதலி கோபிகா மீது கோபம் கொண்டுள்ளான்.

அவரை தீர்த்துக்கட்டுவது என முடிவு செய்த அவன், அதற்காக தாம் வேலை செய்யும் கார் சர்வீஸ் செண்டரில் செவ்வாய்கிழமை அன்று கார் ஒன்றை திருடியுள்ளான். இதற்கிடையே பள்ளிக்கு சென்ற மாணவி கோபிகாவும் வீடு திரும்பவில்லை. கார் திருட்டு குறித்த விசாரணையை முன்னெடுத்த எர்ணாகுளம் போலீசார், அதிரப்பள்ளி - மளுக்கப்பாறை வழியாக வால்பாறையை நோக்கி கார் சென்று கொண்டிருந்ததை ஜிபிஎஸ் கருவி மூலம் கண்டறிந்தனர். உடனடியாக வால்பாறை போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் படி, வாட்டர் பால்ஸ் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த காரை வால்பாறை போலீசார் மடக்கி நிறுத்தியுள்ளனர். காரில் ஜாபர் ஷா மட்டுமே இருந்த நிலையில் அவனை பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன.

பள்ளிக்கு சென்ற கோபிகாவிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய ஜாபர் ஷா, அவரை வீட்டிற்கு செல்ல விடாமல் காரில் கட்டாயப்படுத்தி அமர வைத்து வால்பாறை நோக்கி அழைத்து வந்துள்ளான். வரும் வழியில் இருவருக்கும் காதல் தொடர்பான பிரச்சனை மூண்டுள்ளது. அப்போது கத்தியால் காதலியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த ஜாபர் ஷா உடலை மலைப்பகுதியில் வீசியுள்ளான்.

ஜாபர் ஷா கூறிய இடத்திற்குச் சென்ற வால்பாறை போலீசார் கோபிகாவின் சடலத்தை மீட்டனர். பின்னர் எர்ணாகுளம் போலீசாரிடம் கொலை குறித்த தகவலை தெரிவித்தனர். விரைந்து வந்த எர்ணாகுளம் போலீசார், ஜாபர் ஷா வை கைது செய்து, கோபிகாவின் சடலத்தை மீட்டுச் சென்றனர். பள்ளி மாணவி கடத்தி கொலை செய்யப்பட்டது குறித்து இரு மாநில போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

படிக்கும் வயதில் காதல் போதையில் பாதை மாறினால், என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது இந்த சம்பவம் ..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments