ரயில் பயணிகளிடம் தொடர் திருட்டு.. வடமாநிலத்தினர் 5 பேர் சிக்கினர்..!

0 221

சென்னை சென்டிரல் உள்ளிட்ட ரயில்நிலையங்களில் பயணிகளிடம் தங்க நகைகளை தொடர்ந்து திருடிவந்த ஹரியானா, டெல்லியை சேர்ந்த 5 பேர் கும்பல் கைது செய்யப்பட்டு, 25 சவரன் எடை தங்க கட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சென்னை சென்டிரல் ரயில் நிலைய பகுதியில் பயணிகளிடம் தொடர் நகை திருட்டு நடைபெறுவதாக ரயில்வே போலீஸாருக்கு புகார்கள் வந்தபடி இருந்தன. கடந்த மாதம் பெங்களூருவை சேர்ந்த குடும்பம் ஒன்று வந்தபோது, அவர்கள் பையில் 15 சவரன் நகைகள் வைத்திருப்பதை தெரிந்து கொண்டு மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றார்.

இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தி, திருட்டு கும்பலை பிடிக்க ரயில்வே போலீஸாருக்கு ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதன்படி ரயில்வே போலீஸார் சென்டிரல் ரயில் நிலையத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும் சிசிடிவி காமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு நடத்தினர்.

அதில் மர்ம நபர்கள், தனித்தனியாக பல்வேறு நாட்களில் பயணிகள் தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றை வைத்திருக்கும் கைப்பையை தெரிந்து கொண்டு நைசாக திருடிக் கொண்டு, பேருந்து மற்றும் ஆட்டோக்களில் தப்பிச் செல்லும் காட்சிகள் இருந்தன.

அந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு திருடர்களை சென்டிரல், பேசின்பிரிட்ஜ் உள்ளிட்ட ரயில் நிலைய பகுதியில் போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் சென்டிரல் புறநகர் ரயில் நிலைய பகுதியில் போலீஸார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள், டெல்லி, ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், சென்னை சென்டிரல், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் ரயில்நிலையங்களிலும் பயணிகளிடம் நகைகளை திருடி சென்று, உருக்கி அதை கட்டியாக மாற்றி விற்கும் கும்பலை சேர்ந்தோர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்களை கைது செய்து, உருக்கி வைத்திருந்த 25 சவரன் அளவிலான தங்க கட்டிகளை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments