முன்னோடி விவசாயி பெண்மணிக்கு பிரதமர் மோடி விருது

0 533

நாமக்கல் மாவட்டத்தைச்சேர்ந்த விவசாய பெண்மணி ஒருவர், எள் சாகுபடியில் சாதனை படைத்து, பிரதமர் மோடியிடம் இருந்து முன்னோடி விவசாயி விருது பெற்றுள்ளார். வயதான காலத்திலும் விவசாயத்தையே உயிர் மூச்சாக கொண்டு கடின உழைப்பால் சாதனை படைத்த பெண்மணி பற்றிய செய்தி தொகுப்பு இது.

வேளாண் பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக, சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து, கிரிஷி கர்மான் என்ற விருதினை மத்திய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2017-2018 ம் ஆண்டுக்கான விருதை, பிரதமர் மோடியின் கையால், நாமக்கல் மாவட்டத்தைச்சேர்ந்த பாப்பாத்தி அம்மாள் என்ற பெண் விவசாயி கடந்த 2 ம் தேதி பெற்றுள்ளார்.

இவரது சொந்த ஊர் பரமத்திவேலூர் அருகே உள்ள சீராப்பள்ளி குஞ்சாம்பாளையம் கிராமம் ஆகும். கணவரை இழந்த இவர், தனது 61 வயதிலும், மனம் தளராது மகனுடன் சேர்ந்து விவசாயத்தில் ஈடுபட்டார். கிணற்று பாசனத்தின் மூலம், நிலத்தின் தன்மையை அறிந்து, 85 நாள் குறுவை பயிரான கறுப்பு எள் சாகுபடி செய்ததாகவும், அதற்கு நல்ல பலனாக ஒரு ஹெக்டேர் நிலத்தில் ஆயிரத்து 210 கிலோ எள் மகசூல் கிடைத்ததாகவும் பாப்பாத்தி அம்மாள் தெரிவித்துள்ளார்.

இது தமிழ்நாட்டிலேயே அதிக மகசூல் என்பதால், கிரிஷி கர்மான் விருதுடன் ரூபாய் 2 லட்சம் காசோலை மற்றும் பாராட்டு பத்திரமும் வழங்கி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இயற்கை முறையுடன், பரமத்தியில் உள்ள தமிழக அரசின் வேளாண் அலுவலர்கள் ஆலோசனையால் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்ததாக பாப்பாத்தி அம்மாள் கூறியுள்ளார்.

தனது தாயாருக்கு பிரதமர் விருது வழங்கியது மகிழ்ச்சியளிப்பதுடன், விவசாயத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து இருப்பதாக மகன் ரமேஷ் பெருமிதத்துடன் கூறினார். பாப்பாத்தி அம்மாளுக்கு கிடைத்த விருதை தங்களுக்கு கிடைத்த விருதாகவே எண்ணி கிராம மக்களும், பாராட்டி கொண்டாடுகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments