கஜா புயல் கோரதாண்டவம் ஓராண்டு நிறைவு..!

0 187

டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயல் தாக்கி ஓராண்டான நிலையில் பாதிப்பில் இருந்து மீண்டு எழுந்தாலும், புயலின் கோரத்தாண்டம் இன்னும் கண்முன்னே நிழலாடுவதாக நினைவு கூறுகிறார்கள் மக்கள்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 ந் தேதி நள்ளிரவில் வங்க கடலில் இருந்து கிளம்பிய கஜா புயல், அதிகாலை நேரத்தில் யானை பலத்துடன், டெல்டா மாவட்டங்களை துவம்சம் செய்தது. மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றில் ஆயிரக்கணக்கான மின் கம்பங்களும், தென்னை மரங்களும் சாய்ந்தன.

30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அரசின் போர்க்கால அடிப்படையிலான மீட்பு பணியால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்.

புயல் கோரத் தாண்டவமாடி ஓராண்டு ஆன நிலையில் சாய்ந்த தென்னைகளுக்கு பதிலாக புதிய மரங்களை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால் முந்திரி, மா, வாழை, புளி போன்ற மரங்களை இழந்த விவசாயிகளுக்கு முழு நிவாரணம் கிடைக்கவில்லை என்றும், பல்வேறு பகுதிகளில் சாய்ந்த மரங்கள் நினைவுச்சின்னம் போல் அகற்றப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

வீடு சேதம் அடைந்தவர்கள், அரசு வழங்கிய தார்பாயை வைத்துதான் வீட்டை பாதுகாத்து வருவதாகவும், நிரந்தர வீடுகள் கட்டித்தர நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக உள்ளது.

புஷ்பவனம் மீனவ கிராமத்தில் கடலில் இருந்து அடித்துவரப்பட்ட சேற்றை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் தாமதமாகத் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருவதாகக் கூறுகின்றனர்.

உப்பளங்கள் சேதம் அடைந்ததால் ஆண்டுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தற்போது 4 லட்சம் டன் உப்பு உற்பத்தி மட்டுமே நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.

கோடியக்கரை வனப்பகுதியில் பார்வையாளர் கோபுரம் இடிந்த நிலையிலேயே இன்னும் உள்ளபோதிலும், அங்கு சாய்ந்த மரங்கள், மூலிகை செடிகள் துளிர் விட ஆரம்பித்து இருப்பது இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments