மராட்டிய அரசியலில் உச்ச பரபரப்பு.. திக்..திக்.. நிமிடங்களுடன் நகர்வுகள்

0 448

ட்சியமைப்பதற்கான கெடு முடிவடைய இன்னும் 24 மணி நேரமே எஞ்சியிருப்பதால், மகாராஷ்டிரா அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது. சிவசேனாவை அமைதிப்படுத்த, உத்தவ் தாக்ரேவை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சந்திப்பார் என கூறப்பட்ட நிலையில், அதனை அவர் மறுப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மகாராஷ்டிராவின் 13ஆவது சட்டப்பேரவையின் பதவிக்காலம், நாளையுடன் முடிவடைகிறது. அரசியலமைப்புச் சட்டப்படி, சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைவதற்குள், புதிய ஆட்சி அமைய வேண்டும். ஆனால், பாஜக-சிவசேனா கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் பனிப்போரால், மகாராஷ்டிரா அரசியலில் சிக்கல் உருவாகியுள்ளது.

சிவசேனாவுடனான பிணக்கை தவிர்ப்பதற்காக, வலுதுசாரி அமைப்பொன்றின் தலைவரான 85 வயதான சம்பாஜி பிடேவை, (Sambhaji Bhide) தூதுவராக பாஜக அனுப்பியது. மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபத்னாவிஸ்-ன் நெருங்கிய நண்பராக அறியப்படும் சம்பாஜி பிடே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவை சந்திக்கச் மடோஸ்ரீ இல்லத்திற்குச் சென்றார். அவர் சென்றபோது, உத்தவ் தாக்கரே, அங்கு இல்லாததால், இருவருக்கும் இடையிலான சந்திப்பு நிகழவில்லை.

இந்த நிலையில், மும்பை மேற்கு பந்தராவில் உள்ள ரங்சாரதா (Rangsharda) நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள சிவசேனா எம்எல்ஏக்களை அக்கட்சியின் இளந்தலைவர் ஆதித்யா தாக்கரே நேற்று சந்தித்துப் பேசினார். நீண்ட ஆலோசனைக்குப் பின்னர், இன்று அதிகாலை அங்கிருந்து அவர் கிளம்பிச் சென்றார்.

சிவசேனாவைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியும் தனது எம்எல்ஏக்களை, நட்சத்திர விடுதியில் தங்க வைத்திருக்கிறது. இதற்காக, மும்பையிலிருந்து விமானம் மூலம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளது.

இதனிடையே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரேவை, மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி இன்று சந்தித்துப் பேச இருப்பதாக தகவல் வெளியானது. இன்று காலை, மும்பைக்கு வந்த நிதின் கட்கரி, விரைவில் உத்தவ் தாக்ரேவை சந்திப்பார் எனக் கூறப்பட்டது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி என்ற கடிதத்துடன், நிதின் கட்கரி வருவார் என எதிர்பார்ப்பதாக, கூறியிருந்தார்.

இந்நிலையில், வேறொரு அலுவல் தொடர்பாக, தாம் மும்பை வந்திருப்பதாகவும், எந்தவொரு அரசியல்வாதியையும் தாம் சந்திக்கப் போவதில்லை என்றும், நிதின் கட்கரி, செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவசேனா ஆதரவுடன், பாஜக தலைமையிலான ஆட்சி அமையாவிட்டால், மகாராஷ்டிராவில், குடியரசு தலைவர் ஆட்சி அமலாகும் சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments