நடுச்சாலையில் மோதல்... ரவுடி சிக்கினான்

0 394

சென்னை அண்ணாசாலையில் பட்டப்பகலில் இரண்டு ரவுடி கும்பல் அரிவாளால் தாக்கியும், வெடிகுண்டு வீசியும் தாக்கிக்கொண்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ரவுடி சிவக்குமாரை தனிப்படை போலீசார் செஞ்சியில் கைது செய்தனர்.      

சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிச்சி தெரு அருகே கடந்த 10ந் தேதி தனது தாய் மலர்க்கொடியுடன் இருசக்கர வாகனத்தில் வந்த ரவுடி அழகுராஜாவை, ஒரு ரவுடி கும்பல் அரிவாளால் தாக்கியது. இதில் அழகு ராஜாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அப்போது அழகுராஜாவின் இருசக்கர வாகனத்தின் பின்னால் ஆட்டோவில் வந்த அழகுராஜாவின் கூட்டாளிகள் ரவுடி கும்பல் மீது வெடிகுண்டு வீசிவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் அந்த சமயத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிந்தாதிரிப்பேட்டை போலீசார் அழகுராஜாவின் பரம எதிரியான ரவுடி சிவக்குமார்தான் அழகுராஜாவை கொலை செய்ய திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதை கண்டறிந்தனர். மேலும் நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தியதற்காக அழகுராஜா, மலர்க்கொடி மற்றும் அவனது கூட்டாளிகள் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த ரவுடி சிவக்குமார் மீது கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 23 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் ரவுடி சிவக்குமாரை சென்னை முழுவதும் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சிவக்குமார் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கவே, செஞ்சிக்கு விரைந்து சென்ற போலீசார் ரவுடி சிவக்குமார் மற்றும் அவனது கூட்டாளிகள் 4 பேரை நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவனிடமிருந்து 6 அரிவாள்கள், 2 பட்டாக்கத்திகள், ஒரு 9 எம்.எம்.கைத்துப்பாக்கி மற்றும் 50 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் அழகுராஜாவை அரிவாளால் தாக்க சிவக்குமார் ஏன் முயன்றார் என்பதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஐஸ் அவுசில் காங்கிரஸ் பிரமுகர் அப்பாஸை அழகுராஜா கும்பல் முன்விரோதம் காரணமாக கொலை செய்துள்ளனர். இதற்கு பழிக்கு பழி வாங்குவதற்காக அழகுராஜாவை கொல்ல திட்டமிட்டான்.

அப்பாசின் மைத்துனர் ஷேக். இதற்காக அழகுராஜாவின் பரம எதிரியான சிவக்குமாருடன் கைக்கோர்த்துள்ளான் ஷேக். ஏற்கனவே அழகுராஜாவின் கூட்டாளியான எல்லப்பன் என்பவனுக்கும் சிவக்குமாருக்கும் இடையில் மாமூல் வாங்குவதில் தகராறு இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனால் எல்லப்பனை கொலை செய்ய சிவக்குமார் திட்டம் போட்டு வந்திருக்கிறான். அந்த நேரம் ஷேக்கும் இத்தகைய ஆஃபருடன் வரவே இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர் ஷேக் மற்றும் சிவக்குமார். இது தொடர்பாக ஷேக்கும், சிவக்குமாரும் சென்னை மயிலாப்பூர் சிட்டி சென்டரில் சந்தித்து பேசிய சிசிடிவி காட்சிகளையும் போலீசார் தற்போது கைப்பற்றியுள்ளனர்.

யாரையாவது கொலை செய்ய சிவக்குமார் ஸ்கெட்ச் போட்டு விட்டால் கூலிப்படையை ஏவி விட்டுவிட்டு, சிவக்குமார் சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்று விடுவான் என்றும், கொலை நடந்து முடிந்த பின்னர் போலீசார் அவரைப் பிடித்தால் தனக்கும் அந்த கொலைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, அந்த சமயத்தில் தான் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்தேன் என சினிமா டிக்கெட்டை காண்பித்து சிவக்குமார் லாவகமாக தப்பிச் சென்று விடுவான் என போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. கைதான சிவக்குமார் மற்றும் அவனது கூட்டாளிகள் 4 பேரையும் மயிலாப்பூர் போலீசார் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments