மகாராஷ்ட்ரா, அரியானா மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவு..!

0 587

மகாராஷ்ட்ரா, அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மகராஷ்ட்ராவில் 60 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகின.....

மகாராஷ்டிர மொத்தமுள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக, வாக்குப் பதிவு நடைபெற்றது. பாஜக-சிவசேனா கூட்டணிக்கும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவிய நிலையில், மொத்தம் 3,237 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். காவல்துறையினர், மத்தியப் படையினர் என 3 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்ற வாக்குப் பதிவில் மாலை 5 மணி வரை 44.05 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தன.

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிஸ்((Devendra Fadnavis)), மனைவி அம்ருதா((Amruta)), தாயார் சரிதா((Sarita)) ஆகியோருடன் நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே,ஒர்லி (Worli) சட்டப்பேரவைத் தொகுதியில், போட்டியிடும் தனது மகன் ஆதித்யா தாக்கரே உள்ளிட்ட குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது வாக்கினை பதிவு செய்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பலிவுட் நடிகர்கள், ஷாருக்கான், கோவிந்தா, பிரித்தீ ஜிந்தா, தீபிகா படுகோனே, மாதுரி தீட்சித் உள்ளிட்ட பிரபலங்களும் வாக்களித்தனர்

மும்பை பெருநகரில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்களித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி 93 வயதில், முன்னாள் ராணுவ வீரர் வாக்களிக்க வந்திருப்பது தன்னை மகிழ்வில் ஆழ்த்துவதாக தெரிவித்தார். இவரே இன்றைய ஹீரோ என்றும் பாராட்டி, செல்பி எடுத்துக் கொண்டார்.

இதேபோன்று, 90 தொகுதிகளை கொண்டுள்ள ஹரியானா மாநிலத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 51.93 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தள், ஜனநாயக் ஜனதா கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட கட்சிகள் களமிறங்கியதால், பலமுனை போட்டி இருந்தது.

கர்நால்(Karnal) நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்த மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், வாக்காளர்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்...

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏற்கனவே, தோற்றுவிட்ட காங்கிரஸ் கட்சி, ஒருபோதும் வெற்றிபெறாது என்றார்.

புனே மாவட்டத்திற்கு உள்பட்ட பாராமதி என்ற பகுதியில் கனமழை காரணமாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்த பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள் டிராக்டர்களை வரிசையாக நிற்கவைத்து வாக்குச்சாவடி வரை பாலம் அமைத்தனர். அந்த டிராக்டர் பாலத்தின் மீது ஏறிச்சென்று வாக்குச்சாவடியை அடைந்த வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

அதே போன்று கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அம்மாநிலத்தின் எர்ணாகுளத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. கனமழை காரணமாக வாக்குச்சாவடி முழுவதும் வெள்ள நீரில் ழூழ்கி இருந்தது. ஆனாலும், வெள்ள நீரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் ஜனநாயக கடமையான வாக்களித்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments