தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு தீவிர சிகிச்சை

0 250

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கென தனிப்பிரிவுகள் தொடங்கப்பட்டு நோயாளிகளுக்கு 24 மணி நேர தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெங்குவைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தமிழக சுகாதாரத்துறை காய்ச்சல் ஏற்பட்ட உடன் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை நாடி சிகிச்சை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

கோவை 

கோவை அரசு மருத்துவமனையில் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில வாரங்களில் 50 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சலுடன் 107 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு ரெட் ஜோன் எனப்படும் தனிப்பிரிவில் 24 மணி நேர தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இங்கு காய்ச்சலுக்காக கொசு வலையுடன் கூடிய 90 படுக்கைகள் கொண்ட நான்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவ குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.

சேலம் 

சேலம் அரசு மருத்துவமனையில் 38 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் ராமன் டெங்கு கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கொண்டலாம்பட்டி, மணியனூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி , சந்தை, எம் . ஜி . ஆர் நகர், நெத்திமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், உமா சங்கர் என்னும் தனியார் பருப்பு ஆலையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் லார்வாக்கள் இருப்பதைக் கண்டு அந்த ஆலைக்கு ரூ.20,000 அபராதம் விதித்தார். மேலும் டெங்கு நோய் தடுப்பு, பாதுகாப்பு, விழிப்புணர்வு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

புதுக்கோட்டை 

புதுக்கோட்டையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வண்ணம் ஏராளமான மதுபாட்டில்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை குவித்து வைத்திருந்த தனியார் விடுதியின் உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
புதுக்கோட்டையில் நிஜாம் காலனி, மார்த்தாண்டபுரம், கீழ ராஜ வீதிகள், அய்யனார்புரம், காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் நகராட்சி பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மார்த்தாண்டபுரம் முதல் வீதியில் உள்ள தனியார் விடுதியில் ஏராளமான மது பாட்டில்களும் தண்ணீர் பாட்டில்களும் குவிந்திருந்தது. டெங்கு கொசு உற்பத்தியாகும் படி மது பாட்டில்களையும் தண்ணீர் பாட்டில்களையும் குவித்து வைத்திருந்த விடுதியின் உரிமையாளர்களுக்கு நகராட்சி ஆணையர் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.

திருவள்ளூர் 

திருவள்ளூர் மாவட்டத்தில் 36 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளிடம் நலம் விசாரித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளதாகவும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும்  தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர்களையும் ஒருங்கிணைத்து டெங்கு சிகிச்சை குறித்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். டெங்கு கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர் மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வலியுறுத்தினார்.

சேலம் 

சேலம் மாவட்டம் எடப்பாடியில் 300 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு மருத்துவமனை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற  பேரணி பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய  வீதிகளின் வழியாக வந்து மீண்டும் அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறைவு பெற்றது. 

காஞ்சிபுரம் 

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பரவி வரும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மதுராந்தகம்  காவல் சரகத்திற்கு  உட்பட்ட 8 காவல் நிலைய காவலர்களுக்கு  நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காவல்துறை, போக்குவரத்து காவல்துறை மற்றும் ஊர்காவல் படையினர் உள்ளிட்ட  நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments