கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை சோதனை..!

0 449

நாடு முழுவதும் கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. 

ஆந்திர மாநிலம் வரதய்யபாளையத்தில் கல்கி ஆசிரமம் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. சாதாரண எல்.ஐ.சி. ஏஜென்டாக இருந்தவர் விஜயகுமார். இவர் தன் பெயரை கல்கி பகவான் என மாற்றிக்கொண்டதாகவும், புராணங்களில் கூறப்படும் கல்கி அவதாரம் தானே என கூறிக் கொண்டு ஆசிரமம் அமைத்து செயல்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

அவரது மனைவி புஜ்ஜம்மா தன்னை அம்மா பகவான் என்றும் பத்மாவதி தாயாரின் அவதாரம் என்றும் கூறி வருகிறார். இருவரையும் தரிசனம் செய்ய நுழைவுக் கட்டணமாக 5000 ரூபாய்க்கும் அதிகமாகவும், பாத பூஜை செய்ய பல ஆயிரக்கணக்கான ரூபாய்களும் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் கல்கி ஆசிரமத்திற்கு பல்வேறு வழிகளில் வருமானம் வரும் நிலையில் அதில் வரி ஏய்ப்பு நடைபெறுவதாக புகார் எழுந்தது. இதனை அடுத்தே கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் வரதய்யபாளையத்திலுள்ள கல்கி ஆசிரமத்திற்கு தமிழகத்திலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 4 குழுக்களாக பிரிந்து ஆசிரமம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

100 கோடி ரூபாய்க்கு மேல் வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படும் நிலையில் கல்கி விஜயகுமாரின் மகன் கிருஷ்ணாஜி அவரது மனைவி பித்ரா ஜீ, உள்ளிட்டோரை தனித்தனி அறையில் வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள கல்கி ஆசிரம அலுவலகத்திலும்  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். ஆயிரம் விளக்கில் உள்ள வணிக வளாக கட்டிடம் ஒன்றின் 3-வது மாடியில் உரிய பெயர்ப்பலகை ஏதுமின்றி கல்கி ஆசிரம அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனையின் போது கணக்குள் தொடர்பான ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனையையும் தொடர்ந்து வருகின்றனர். வருமான வரி சோதனையை முன்னிட்டு கல்கி ஆசிரம அலுவலகம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் கற்றை கற்றையாக ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை 20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கணக்கில் வராத சொத்துக்கள் தொடர்பான ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவற்றை மதிப்பீடு செய்து வருவதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சோதனைகள் நாளையும் நீடிக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments