அரசுக்கு போட்டியாக ஆற்றில் போர்வெல்..! தண்ணீர் திருடும் கும்பல்

0 351

காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூர் பாலாற்றின் நடுவில் அரசியல் பிரமுகர் ஒருவர் 2 போர்வெல் அமைத்து, சட்டவிரோத மின் இணைப்பு கொடுத்து தண்ணீர் திருடிவருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூர் பகுதியில் செயல்பட்டு வரும் லட்சுமி வாட்டர் சப்ளைஸ் என்ற தனியார் நிறுவன லாரிகள், தினமும் நூற்றுகணக்கான முறை தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்து வருவதாகவும், சட்டவிரோதமாக பாலாற்றின் மத்தியில் இரண்டு போர்வெல் அமைத்து நிலத்தடி நீரை திருடி விற்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

மாமண்டூர் அருகே ஆற்றில் குடிநீர் திட்டத்துக்கு அரசு நீர் எடுக்கும் இடத்துக்கு அருகில் திருட்டுத்தனமாக, போட்டிக்கு இரு போர்வெல்கள் அமைத்து அதனுள் சட்டவிரோதமாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருப்பதும், மின் மோட்டார் மூலம் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி வருவதும் வெளிச்சத்திற்கு வந்தது.

நள்ளிரவு நேரங்களில் யாராவது இந்த மின்வயரில் மிதித்தால் உயிருக்கு ஆபத்து நேரிடும் விபரீதமும் உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்கள் அந்த இடத்தை படம் பிடித்துச் சென்ற தகவல் அறிந்த உள்ளூர் மின்வாரிய ஊழியர்கள், அவசர அவசரமாகச் சென்று சட்டவிரோதமாக கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பை துண்டித்தனர்.

அரசியல் கட்சிப் பிரமுகரான அப்பாத்துரை என்பவர் தான் இந்த சட்டவிரோத போர்வெல்கள் அமைத்திருப்பதாக உள்ளூர் கரும்பு விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். பல நிறுவனங்கள் ஆற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சுவதாக தெரிவித்த அப்பாதுரை, தண்ணீர் சப்ளை செய்யும் நிறுவனம் தனது மகனுக்கு சொந்தமானது என்றும் அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்றே தண்ணீர் உறிஞ்சி விற்பதாகவும் விளக்கம் அளித்தார்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற எம்.ஜி.ஆரின் திருடாதே படத்தின் பாடல் வரிகள் தான் இந்த சம்பவத்தை பார்க்கும் போது நினைவுக்கு வருகின்றது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments