கொள்ளைக்கார வெள்ளைக்காரி..! வியாபாரிகளுக்கு செல்பி அல்வா

0 925

திருச்சி, திருவாரூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு கடைகளில் செல்ஃபி எடுப்பது போல கவனத்தை திசைதிருப்பும் வெள்ளைக்காரி ஒருவர், தனது கூட்டாளியுடன் சேர்ந்து வியாபாரிகளிடம் கொள்ளையில் ஈடுபட்டுவருவதால் எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் உள்ள முகமது சபியுல்லாவின் மளிகைக் கடைக்குள் தனது கூட்டாளியுடன் நுழைந்த இந்த வெள்ளைக்கார பெண்மணி, கடையில் இருப்பவர்களுடன் பேச்சுக் கொடுத்து கவனத்தை திசை திருப்ப, காசாளரிடம் சென்ற வெள்ளைக்கார கூட்டாளி தனது பர்சில் உள்ள வெளிநாட்டுப் பணத்தை காட்டி, இதனை இந்திய ரூபாயாக மாற்ற வேண்டும் என்று பேச்சு கொடுத்ததோடு சிஎல் சீரியல் எண் கொண்ட 500 ரூபாய் நோட்டு இருந்தால் தரும்படி ஆங்கிலத்தில் கூறியுள்ளான்.

2 ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் பரவாயில்லை என கூறியுள்ளான். கடையின் உரிமையாளர் முதலில் 500 ரூபாய் நோட்டுகட்டை எடுத்து காட்ட அதில் சீரியல் நம்பரை தேடுவது போல சில நோட்டுக்களை அபேஸ் செய்துள்ளான், அதே போல 2 ஆயிரம் ரூபாய் நோட்டிலும் சில ரூபாய் நோட்டுக்களை உருவி உள்ளான்.

அங்கிருந்தவர்களின் கவனத்தை வெள்ளைக்கார பெண்மணி திசை திருப்பியதால் பணம் அபேஸ் செய்யப்பட்டதை யாரும் கவனிக்கவில்லை. பின்னர் சிறிது நேரம் கழித்து பணம் கொள்ளை போனதை அறிந்து கொள்ளைக்கார வெள்ளைக்காரர்களை தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளனர். அதற்குள் இருவரும் தங்கள் கைவரிசையை சிவகங்கை மாவட்டத்திற்கு மாற்றியுள்ளனர்.

காரைக்குடி செக்காலை பகுதியில் உள்ள அமலா ஸ்டோர் என்ற மளிகைக் கடையிலும் வெள்ளைக்காரப் பெண்மணி செல்ஃபி எடுப்பது போல அல்வா கொடுக்க , காசாளரான பெண்ணிடம் 500 ரூபாய் கட்டில் இருந்து சிஎல் சீரியல் ரூபாயை பார்ப்பது போல நடித்து 6 ஆயிரம் ரூபாயை லாவகமாக அபேஸ் செய்து சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

அங்கிருந்து திருச்சி மணப்பாறைக்கு நகர்ந்த வெள்ளைக்கார கொள்ளைகாரர்கள் அங்குள்ள இரும்புக்கடை உரிமையாளர் பரிஷத் அலி என்பவரிடம் சில்லரை ரூபாய் நோட்டுக்களை கொடுத்து 2 ஆயிரம் ரூபாய் வாங்குவது போல நடித்து நல்ல நோட்டை கிழித்து கொடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டு கட்டை எடுத்த போது சிஎல் சீரியல் பார்ப்பது போல நடித்து கைவரிசை காட்டியுள்ளனர்.

அவரிடம் இரண்டு 500 ரூபாய் நோட்டு 8 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை அபேஸ் செய்தது விட்டு செல்ஃபி பெண்ணை அழைத்துக் கொண்டு காரில் ஏறிச் தப்பிச்சென்றுள்ளனர். அவர்கள் சென்ற பின்னர் தான் ஏமாற்றப் பட்டது குறித்து கடை உரிமையாளர் போலீசில் புகார் அளித்து உள்ளார்.

இந்த வெள்ளைக்கார திருடர்களின் மோசடி வேலைகள் அனைத்தும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராக்களில் பதிவாகி உள்ளன. இதனை அறிந்தும் தைரியமாக அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுவருவது போலீசாருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த நூதன வெள்ளைக்கார கொள்ளையர்களை பிடிக்க வியூகம் வகுத்துள்ள காவல்துறையினர், இந்த புகைப்படத்தில் உள்ள வெளிநாட்டு நபர்கள் கடைக்கு வந்தால் பிடித்து வைத்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

இவர்கள் மட்டுமல்ல வேறு நபர்கள் வந்து இதுபோன்று செயல்களில் ஈடுபட்டாலும் முன் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்குமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments