கர்நாடகாவில் இடைத்தேர்தல் வந்தால், மதசார்பற்ற ஜனதா தளம் தனித்தே போட்டியிடும்

0 225

கர்நாடகாவில் இடைத்தேர்தல் வந்தால், மதசார்பற்ற ஜனதா தளம்  கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவனத் தலைவர் தேவ கவுடா தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை இது குறித்து பேசிய தேவ கவுடா, கர்நாடகாவில் இடைத்தேர்தல் வருவதற்கு வாய்ப்பிருப்பதாக  தெரிவித்துள்ளார். அவ்வாறு இடைத்தேர்தல் வந்தால் முன்னர் செய்த தவறையே மீண்டும் செய்யாமல், மதச்சார்பற்ற ஜனதா தளம் தேர்தலை தனித்து சந்திக்க வேண்டும்  எனவும் அவர் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தலுக்கு பின்னர் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்தன. 37 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு முதலமைச்சர் பதவியை காங்கிரஸ் விட்டுக் கொடுக்க, ஹெச்.டி.குமாராசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்தக் கூட்டணியால் மக்களவை தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதையடுத்து கூட்டணியின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். தொடர்ந்து சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் குமாரசாமி பதவி விலக, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேரையும், ஒரு சுயேட்சை எம்.ல்.ஏவையும் சபாநாயகர் ரமேஷ் குமார், கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்தார்.

இதையடுத்து சித்தராமையாவின் கருத்தை புறக்கணித்துவிட்டு  காங்கிரஸ் கட்சி தனது மகனை முதலமைச்சராக்கியதுதான் தவறாகிவிட்டது என்றும் தேவகவுடா கடந்த மாதம்  கருத்து தெரிவித்தார். ஆனால் தேவ கவுடா அரசியல் உள்நோக்கத்துடன் தம் மீது பழி சுமத்துவதாக சித்தராமையா பதிலளித்திருந்தார். இந்நிலையில்தான் இனி வரும் தேர்தல்களில் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடப் போவதாக தேவகவுடா தெரிவித்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments