பஞ்சர் ஆன கார் டயரை சரிசெய்துகொண்டிருந்தபோது பேருந்து மோதி மருத்துவர், கார் ஓட்டுநர் உயிரிழப்பு

மகாராஷ்ட்ராவில், பஞ்சர் ஆன கார் டயரை பழுதுபார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது பின்னால் வந்த பேருந்து ஒன்று மோதியதில் மருத்துவர் மற்றும் கார் ஓட்டுநர் உயிரிழந்துள்ளனர்.
புனேவில் செயல்பட்டுவரும் மருத்துவமனையொன்றில் மருத்துவராக பணியாற்றிவந்த கேதன் ஸ்ரீபத் குர்ஜேகர் (Ketan Shripad Khurjekar) என்பவர், மும்பையில் நடைபெற்ற மருத்துவ மாநாடு ஒன்றில் பங்கேற்றுவிட்டு, மேலும் இரு மருத்துவர்களுடன் வாடகை காரில் திரும்பியுள்ளார். டேல்கான் எனும் பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது காரின் டயர் திடீரென பஞ்சர் ஆனதால், கார் ஓட்டுநர் நைனேஸ்வர் போஸ்லே அதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, காரில் இருந்த மூன்று மருத்துவர்களும் கீழே இறங்கி, டயரை மாற்றிக்கொண்டிருந்த ஓட்டுநருக்கு உதவிசெய்துள்ளனர். அப்போது அவ்வழியே வந்த சொகுசு பேருந்து ஒன்று, அவர்கள் மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மருத்துவர் குர்ஜேகர் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோர் உயிரிழந்தனர்.
லேசான காயமடைந்த மற்ற இரு மருத்துவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பேருந்து பலமாக மோதியதால் காரின் பின்பகுதி முற்றிலும் உருக்குலைந்தது. விபத்து ஏற்படுத்திய சொகுசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை சம்பவ இடத்திலேயே நிறுத்திவிட்டு தப்பியோடியதாக கூறப்படும் நிலையில், போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Comments