ஜம்மு காஷ்மீர் நிலவரத்தை ஆராய புறப்பட்டது எதிர்க்கட்சிகள் குழு

0 465

ஜம்மு காஷ்மீர் மாநில நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக, ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகர் புறப்பட்டனர். 

ஜம்மு காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதுடன், அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவுகளை நீக்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் அங்கு பதற்றமான இடங்களில் ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. 400க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். செல்போன் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர் தொடர்பான அறிவிப்புகள் வெளியான பின்னர், இரு வாரங்கள் கழித்து படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

இருப்பினும், அம்மாநில அரசியல் தலைவர்களுக்கான காவல் நீடிக்கிறது. அதேவேளையில், அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் காஷ்மீர் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஸ்ரீநகர் வரை செல்லும் தலைவர்களை, விமான நிலையத்தில் வைத்தே மடக்கும் அதிகாரிகள், திருப்பி அனுப்பி வைத்து விடுகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியவாத காங்கிரஸ் என 9 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் புறப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கூட்டணிக் கட்சியினர் மற்றும் மக்களைச் சந்தித்து அவர்கள் நிலவரங்களைக் கேட்டறிய உள்ளனர்.

ராகுல் காந்தி தலைமையில் செல்லும் அக்குழுவில் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா போன்ற மூத்த தலைவர்களும் உள்ளனர்.
இதற்கிடையே, எதிர்க்கட்சித் தலைவர்களின் வருகையால் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை பாதிக்கப்படக் கூடும் என்று அம்மாநில மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீரடைந்து விட்டது என்றால், அரசியல் தலைவர்களுக்கு அனுமதி மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments